Friday, September 13, 2013

பிளஸ் 1 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் அனைவருக்கும் சைக்கிள் வழங்கும் திட்டம் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டது. பின்பு, 2005 ஆம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் அனைத்துப் பிரிவு மாணவ, மாணவியருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 6.43 லட்சம் பேர்: நடப்புக் கல்வியாண்டில் ரூ. 212.43 கோடி செலவில் 2 லட்சத்து 86 ஆயிரத்து 328 மாணவர்கள் மற்றும் 3 லட்சத்து 57 ஆயிரத்து 539 மாணவிகள் என மொத்தம் 6 லட்சத்து 43 லட்சத்து 867 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் வகையில் ஏழு பேருக்கு சைக்கிள்களை வழங்கினார் முதல்வர் ஜெயலலிதா.
சிறப்பிடம் பெற்றோருக்கு சிறப்பு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
மாநில அளவில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரொக்கப் பரிசுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் மாநில அளவில் பத்தாம் வகுப்பு அரசு அரசு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு முறையை ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.15 ஆயிரம் என்ற வீதத்திலும், பிளஸ் 2 வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் என்ற வீதத்திலும் பிற்படுத்தப்ப்டடோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவர்களுக்குத் தனியாகவும், மாணவியருக்குத் தனியாகவும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 80 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.14 லட்சத்துக்கான ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
அவர்களில் ஏழு மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகளை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (செப்.13) வழங்கினார்.
பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கும்
திட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்து மாணவி
ஒருவருக்கு சைக்கிள் வழங்கும் முதல்வர் ஜெயலலிதா.
உடன் (இடமிருந்து) அமைச்சர்கள் அப்துல் ரஹீம்,
பழனியப்பன், நா.சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment