Friday, September 13, 2013

14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை துவக்கி வைத்தார் முதல்வர்

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தலைமைச் செயலகத்தில், 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,  2 பல்கலைக்கழக உறுப்பு  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி  மூலமாக தொடங்கி வைத்தார்.

கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி சிரமப்படாமல் அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே கல்வி கற்பதற்கு ஏதுவாக தமிழக அரசு கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது. இதன் மூலம், கிராமப்புற மாணவ, மாணவியர் கல்வியில் இடைநிற்றலைத் தவிர்த்து, உயர்கல்வி கற்று நல்ல வேலை வாய்ப்புகள் பெற்றிடவும், அதன் மூலம் பொருளாதார நிலை உயர்ந்து வாழ்வில் சிறப்பான நிலையை அடைந்திடவும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற மாணவ, மாணவியர்  உயர்கல்வியினைத் தொடர்ந்து கற்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  22 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதல்வரால் தொடங்கப்பட்டு பெருமளவிலான கிராமப்புற மாணவ, மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். இத்தகைய பயனுடைய உயர்கல்வி வசதியை கிராமப்புற மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து வழங்கிடும் நோக்கில் நடப்பாண்டில் மேலும் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.
அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் - கறம்பக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் - பேராவூரணி, திருப்பூர் மாவட்டம் - காங்கேயம்,  நாமக்கல் மாவட்டம் - குமாரபாளையம், தருமபுரி மாவட்டம் - காரிமங்கலம் (மகளிர்), கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூர், காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர், தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி, இராமநாதபுரம் மாவட்டம் - கடலாடி, திருவாடணை, முதுகுளத்தூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி ஆகிய 12 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், பெரம்பலூர் மாவட்டம் - வேப்பூரில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டம் - திட்டக்குடியில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, என மொத்தம் 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் துவக்கி வைத்தார்.
இந்த 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் 210 ஆசிரியர் பணியிடங்களும், 238 ஆசிரியரல்லா பிற பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.  மேலும், பணியாளர் சம்பளம், அலுவலக செலவினம் ஆகியவற்றிற்கும் மற்றும் கணினிகள், அறைகலன்கள், புத்தகங்கள், கருவிகள் போன்றவை கொள்முதல் செய்வதற்கும் 17 கோடியே 9 லட்சத்து  94 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கல்லூரிகளுக்கு 105 கோடியே  85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்  நிரந்தரக் கட்டடங்கள் கட்டுவதற்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதல்வரால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதற்கட்டமாக  பி.ஏ., (ஆங்கிலம்), பி.ஏ., (தமிழ்), பி.காம்., பி.எஸ்.சி., (கணிதம்) மற்றும் பி.எஸ்.சி., (கணினி அறிவியல்) ஆகிய ஐந்து பாடப் பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு அதற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment