Thursday, September 5, 2013

பிளஸ் 2 தனித்தேர்வு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 தனித்தேர்வுக்கு செப்.5 முதல் செப்.10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
வரும் அக்டோபரில் நடைபெற உள்ள பிளஸ் 2 தனித்தேர்வுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதி:
பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், தாங்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டு இடைவெளியும் செப்டம்பர் 1-ம் தேதியோடு பதினாறரை வயது பூர்த்தி செய்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம்.
நேரடித் தனித்தேர்வர்கள் மொழிப்பாடங்களைத் தவிர்த்து வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் போன்ற பாடங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்தல்:
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in அல்லது www.tndge.in ஆகிய இணையதளங்களில் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். ஆன்-லைனில் முழுமையாக விவரங்களைப் பதிவுசெய்து புகைப்படத்தோடு பதிவேற்றம் செய்ய வேண்டும். பிறகு, புகைப்படத்துடன் பதிவுசெய்த விவரங்களுடன் உள்ள விண்ணப்பத்தையும், தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய பதிவுச் சீட்டினையும் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
விண்ணப்பத்தை நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டிய அலுவலகங்கள்:தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும்போது எந்த கல்வி மாவட்டத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று குறிப்பிடுகிறார்களோ, அந்த கல்வி மாவட்டத்துக்குரிய மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் மற்றும் பதிவுச் சீட்டினை உரிய இணைப்புகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பங்களை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை (அரசு விடுமுறை நாள்களான செப்டம்பர் 8,9 தவிர்த்து) நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.
பணமாகச் செலுத்த வேண்டும்:தனித்தேர்வர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் தேர்வுக் கட்டணத்தை பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். செலுத்த வேண்டிய தேர்வுக் கட்டணம் பதிவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
கட்டணம் எவ்வளவு?மறுமுறைத் தேர்வு எழுதுவோர் (எச்- வகை தனித்தேர்வர்கள்) ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அதனுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ஐ செலுத்த வேண்டும். நேரடி தனித்தேர்வர்கள் (எச்பி- வகை தனித்தேர்வர்கள்) தேர்வுக் கட்டணமாக ரூ.187-ஐச் செலுத்த வேண்டும்.
என்னென்ன ஆவணங்கள்?மாவட்டக் கல்வி அலுவலகத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு சமர்ப்பிக்க வேண்டிய இதர ஆவணங்கள் விவரம்:
எச் வகை தனித்தேர்வர்கள்:தேர்வுக் கட்டணம், சான்றொப்பமிடப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழின் நகல், பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவர்களாக பதிவு செய்து தேர்வு எழுதாதவர்கள் மட்டும்), செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களைத் தேர்வு எழுதுவோர்) ஆகிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எச்பி வகை தனித்தேர்வர்கள்:தேர்வுக் கட்டணம், பத்தாம் வகுப்பு அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாறுதல் சான்றிதழின் அசல், இடப்பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநில மாணவர்களுக்கு மட்டும்).
இந்த ஆவணங்களுடன் பெறப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment