Wednesday, September 4, 2013

370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

தமிழகம் முழுவதும் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது சென்னையில் வியாழக்கிழமை (செப்.5) நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் வழங்கப்படுகிறது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 196 பேர், உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர், மெட்ரிக் பள்ளிகளின் ஆசிரியர்கள் 25 பேர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் மற்றும் சமூக நலத் துறை பள்ளிகளைச் சேர்ந்த தலா 2 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்கள் 10 பேர் என மொத்தம் 370 ஆசிரியர்கள் இந்த விருதைப் பெற உள்ளனர்.
மாவட்டங்களில் இருந்து இந்த விருதுக்கு 860 பேர் கொண்ட பட்டியல் அனுப்பப்பட்டது. அவர்களிலிருந்து விருதுக்கான 370 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்களுக்குக் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுடன் ரூ.5 ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ், வெள்ளிப் பதக்கம் ஆகியவை வழங்கப்படும். சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் அரங்கில் ஆசிரியர் மற்றும் அவருடன் ஒருவர் அனுமதிக்கப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைச்செல்வன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்குகிறார். பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்கிறார்.
இந்த ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து ஆசிரியர்களும் தங்கள் மீது குற்ற வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என்று காவல் நிலையங்களில் இருந்து சான்றிதழைப் பெற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு, விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

No comments:

Post a Comment