Friday, September 13, 2013

விடுதி மாணவர்களுக்கு அடையாள அட்டை: ஆதிதிராவிட நலத்துறை புது முயற்சி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், அனைத்து விடுதிகளில், மாணவர் அல்லாதோரின் வருகையை கட்டுப்படுத்த, அடையாள அட்டை முறையை கொண்டு வர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் சாத்தியமாகுமா என்பது, நடைமுறைக்கு வரும்போது தெரிய வரும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், 1,300 ஆதிதிராவிடர் நல விடுதிகளில், 97,239 மாணவர்; 42 பழங்குடியினர் நல விடுதிகளில், 2,782 மாணவர்; 301 உண்டு உறைவிட பள்ளிகளில், 31,899 மாணவர் தங்கியுள்ளனர். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில், மாணவர்களை விட, மாணவர் அல்லாதோரே, அதிக அளவில் தங்கி வருகின்றனர். குறிப்பாக, நகர் மற்றும் மாநகர் பகுதிகளில் உள்ள விடுதிகளில், முன்னாள் மாணவர்களும், மாணவர் அல்லாதோரும், அதிக அளவில் தங்கியுள்ளனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, சிற்றுண்டி, இன்ன பிறவற்றை, இவர்கள் தட்டிப் பறிக்கின்றனர். விடுதியில் சேரும், முதலாம் ஆண்டு மாணவர்களை, தங்கள் சொந்த வேலைக்கு, பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, விடுதிகளில் தங்கி உள்ள, அனைத்து மாணவர்களுக்கும், அடையாள அட்டை வழங்க, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முடிவு செய்துள்ளது. விடுதி வார்டன்கள் கேட்கும் போது, எடுத்துக் காட்டும் வகையில், எப்போதும் பாக்கெட்டில் வைத்திருக்கும் வகையில், உத்தரவிட போவதாக தெரிகிறது. இத்திட்டம் நடைமுறையில் சாத்தியமா என, தெரியவில்லை.
விடுதியில் தங்கும் மாணவர்கள் குறித்து, வார்டன்களுக்கு நன்கு தெரியும்; விடுதிக்கு யார், யார் வருகின்றனர்; எந்த அறையில் தங்குகின்றனர்; அவர்களின் பின்னணி என்ன என்பது குறித்த அனைத்து தகவல்களும், வார்டன்களுக்கு தெரியும். மாணவர்களுக்கு, அடையாள அட்டை வழங்குவதை விட, விடுதி வார்டன்களை கண்காணிப்பதற்கு, புது திட்டம் தீட்டினால், மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கே, நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment