Saturday, September 14, 2013

தஞ்சை தமிழ்ப் பல்கலையில் ஆன்-லைன் மூலம் கற்கும் வசதி அறிமுகம்

பழைமைக்கும் பழமையாக, புதுமைக்கும் புதுமையாக ஆன்-லைன் முறையில் புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது" என, துணைவேந்தர் திருமலை கூறினார்.
தஞ்சையில் அரண்மனை வளாகத்திலுள்ள தமிழ்ப்பல்கலை., பதிப்புத்துறை அலுவலகத்தில் நூல்களுக்கு 50 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா மற்றும் தமிழ்ப்பல்கலை., தொடக்கநாள் விழா நடந்தது. பதிவாளர் கணேஷ்ராம், செம்மொழி தமிழ் உயராய்வு மைய
இயக்குனர் கந்தசாமி, புலத்தலைவர் சுப்பிரமணியன், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவர் மோகன்தாசு ஆகியோர் பேசினர்.
விழாவில், தஞ்சை மூத்த வக்கீல் ராமலிங்கம் பேசுகையில், "தஞ்சையில் அண்ணாதுரை பிறந்தநாளான செப்., 15ல் தமிழ்ப்பல்கலை.,யை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., துவக்கி வைத்தார். மற்ற பல்கலை.,களுக்கு தமிழ்ப்பல்கலை மாறுபட்டும், தனித்தன்மையுடனும் பணியாற்றி வருகிறது.
துவக்கத்தில் ஓய்வு அறிஞர்கள், துறை தலைவர்களை கொண்டு பல்கலை.,யில் ஆய்வு பணிகள் முடுக்கி விடப்பட்டன. தமிழ்ப்பல்கலை.,யில் பதிப்பிக்கப்படும் நூல்கள் தமிழகத்திலுள்ள கல்லூரிகள், நூலகங்களில் இடம்பெற வேண்டும் என, அரசு அரசாணை பிறப்பித்தால் நூல் விற்பனையில் பலமடங்கு பதிப்புத்துறை சாதனை படைக்க வாய்ப்பு ஏற்படும்" என்றார்.
துணைவேந்தர் திருமலை தலைமை வகித்து பேசியதாவது: "தஞ்சை தமிழ்ப்பல்கலை.,யில், கடந்த 1982ம் ஆண்டு ஆய்வு உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வில் பங்கேற்க இதே கட்டிட அறைக்கு இளைஞனாக வந்துள்ளேன். அந்த வாய்ப்பு கிடைக்காத நிலையில் 32 ஆண்டு கழித்து துணைவேந்தராக பொறுப்பேற்று, தமிழ்மொழி வளர்ச்சிக்கு பணியாற்றும் பெரியதும், அரியதுமான வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ்ப்பல்கலை முதல் துணைவேந்தர் சுப்பிரமணியன் பொறுப்பு வகித்து, பரந்து விரிந்து கிளை பரப்பிய பல்கலை.,யில் பணிவாய்ப்பு கிடைக்காததற்கு ஏங்கிய காலம் உண்டு. காலம் சில நேரங்களில் சூழலை மாற்றி, மனிதர்களுக்கு மாற்றத்தை தந்து விடுவது இயல்பு. முன்வெளியீட்டு திட்டத்தில் பல அரிய நூல்களை பதிப்புத்துறை வெளியிட்டுள்ளது.
தஞ்சையில் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே தமிழ்ப்பல்கலை.,க்கு தொலைநிலைக்கல்வி மையமும், பதிப்புத்துறை விற்பனை கூடமும் புதிதாக துவக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மிகுந்த பகுதியில் மையமும், விற்பனை கூடமும் அமைக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள், மாணவர்கள் இத்தகைய வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஆன்லைன் முறையில், பதிப்புத்துறை நூல்களை வாசகர்களுக்கு விற்பனை செய்யும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்படும்.
பதிப்புத்துறை மூலமாக பயனுள்ள, கையடக்க பதிப்புகளை அதிகளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தொல்காப்பியம், சிலப்பதிகாரம், பதினெண்கீழ் கணக்கு உள்ளிட்ட இலக்கிய நூல்களுக்கு தகவல் தொகுப்பு அடங்கிய கருவி நூல்கள் வெளியிட, ஆட்சி மன்றக்குழுவில் விவாதித்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் இலக்கியங்களில் ஒரு குறிப்பிட்ட தகவல், கதாபாத்திரம், சிறப்பம்சம் எங்கெங்கு வருகிறது என்பதனை நொடியில் கண்டுபிடிக்க முடியும்.
தஞ்சை தமிழ்ப்பல்கலை.,யில் தற்போது 67 பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படுகின்றன. இதைத்தொடர்ந்து மேலும் 31 புதிய பாடப்பிரிவுகளை துவக்கும் திட்டம் உள்ளது. குறிப்பாக, எம்.ஏ., தமிழ், ஜோதிடம், மரபுவழி மருத்துவம், அக்குபஞ்சர், எம்.பி.ஏ., உள்ளிட்ட பாடப்பிரிவுகளை ஆன்லைன்முறையில், விண்ணப்பித்து, பயிலும் முறையும் வரும் ஆண்டில் ஜன., மாதம் முதல் துவங்கப்படும்.
துவக்கத்தில் 12 பாடப்பிரிவுகள் வரை ஆன்-லைன் முறையில் பயில வசதி ஏற்படுத்தப்படும். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் கூட கல்லூரி படிப்பை தொடரும் வகையில், ப்ரீ பவுண்டேஷன், பவுண்டேஷன் எனப்படும் புதிய கோர்ஸ்கள் துவங்கப்படும்.
தஞ்சை தமிழ்ப்பல்கலை என்றாலே பழமையான பல்கலை என்னும் நிலை மாறிவிட்டது. பழைமைக்கும் பழமையாக, புதுமைக்கும் புதுமையாக ஆன்-லைன் முறையில் புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிலும் வசதி, பதிப்புத்துறை புத்தகங்களை வீட்டிலிருந்தே அறிந்து, ஆன்-லைன் முறையில் பெறும் வசதி என நவீனமயமும் புகுத்தப்பட்டு அனைத்து துறைகளிலும் தொய்வு நிலை மாறி, புத்துணர்வு பாய்ச்சப்பட்டுள்ளது.
பதிப்புத்துறை சார்பில் 50 சதவீதம் தள்ளுபடி விற்பனை செப்., 13ம் தேதி முதல் அக்., 12ம் தேதி வரை நடக்கிறது. இதனை தஞ்சை மக்கள், வாசகர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்." இவ்வாறு, அவர் பேசினார்.

No comments:

Post a Comment