Friday, September 6, 2013

ஆங்கில  வழிக்கல்வி  கற்பதில்  சிக்கல் - பாடப்புத்தகங்கள்  தட்டுப்பாடு

பள்ளி துவங்கி மூன்று மாதங்கள் முடிந்துள்ள நிலையில், அரசு பள்ளிகளுக்கு இதுவரை ஆங்கில வழி பாடப் புத்தகங்கள் வழங்காததால், ஆறாம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் மூலம் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.அதன்படி, ஆண்டுதோறும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளிகளுக்குத் தேவையான புத்தகங்களின் கேட்பு பட்டியல் அடிப்படையில், பாடப் புத்தகங்கள் வழங்கப்படுவது வழக்கம்.அரசு பள்ளிகளில், இந்த கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்வி துவங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் 55 பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி துவக்கப்பட்டு, இதுவரை 856 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.ஆனால் அதற்குத் தேவையான பாட புத்தகங்களின் கேட்பு பட்டியல் தாமதமாக வழங்கப்பட்டதால், பள்ளி துவங்கி மூன்று மாதங்களான நிலையில், ஓரிரு பள்ளிகளைத் தவிர பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆங்கில வழி பாடப்புத்தங்கள் இதுவரை வழங்கவில்லை.இதனால், ஆசிரியர்கள், வேறு பள்ளிகளில் இருந்து, ஆங்கில வழிப் புத்தகங்களை இரவல் வாங்கி வந்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். 
புத்தகம் இல்லாமல் கல்வி கற்கும் மாணவர்கள் பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். மேலும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆங்கில வழி பாடம் நடத்த போதிய வகுப்பறைகள் ஒதுக்கப்படவில்லை. போதிய ஆசிரியர்களும் இல்லை.தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாட புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்து வரும் நிலையில், ஆங்கில வழி மாணவர்களுக்கு முதல் பருவபுத்தகங்கள் இதுவரை வழங்காமல் உள்ளது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். இதனால் ஆங்கில வழி பயிலும் மாணவ, மாணவிகள் கல்வி கற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழி பாடப் புத்தகங்களை வழங்கி, போதுமான வகுப்பறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து, அதற்கான ஆசிரியர்களையும் நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment