Friday, September 13, 2013

நிதித்துறை அரசாணையில் "தமிழ் பண்டிட்" வார்த்தையால் தமிழாசிரியர்கள் பாதிப்பு

நிதித்துறை, 2013ல் வெளியிட்ட, அரசாணை எண், 263ல், "தமிழ் பண்டிட்" என்ற வார்த்தையால், தர ஊதியம் பெறுவதில், பட்டதாரி தமிழாசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இதை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழக தமிழாசிரியர்கள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கல்வித் துறையில், 1989, 2008ம் ஆண்டுகளில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண், 686, 161ல், தமிழ் பண்டிட் என்ற பணியிடம் நிலை மாற்றம் செய்யப்பட்டு, கணித, அறிவில் ஆசிரியர்கள் போல், பள்ளி உதவி ஆசிரியர் அல்லது பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) என்று அழைக்கப்பட்டு வருகின்றனர்; தமிழ் பண்டிட் என்ற பணியிடம் இல்லை.
ஆறாவது ஊதியக்குழுவில், தமிழாசிரியர்களுக்கு, 4,400 ரூபாய் என, தர ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டு, பின், பட்டதாரி ஆசிரியர்களுக்கான, 4,600 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு, 2011 முதல் பணப்பலன்களை பெற்று வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு இணையான, தொழில் கல்வி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள், கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு தர ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.
இவர்களது கோரிக்கையின் பலனாக, தர ஊதிய உயர்வு வழங்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் படி, நிதித்துறை 2013ல் வெளியிடப்பட்ட அரசாணை, 263ல், தமிழ் பண்டிட் என்ற வார்தையும் இடம் பெற்றுள்ளது. தமிழ் பண்டிட் பணியிடம் இல்லாத நிலையில், இந்த வார்த்தை இடம் பெற்றுள்ளதால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அரசு, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் தமிழாசிரியர்கள், தர ஊதியம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டுள்ளனர். நிதித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ் பண்டிட் என்ற வார்த்தையை நீக்கி, திருத்தம் செய்ய வேண்டும் என, தமிழக தமிழாசிரியர்கள் கழகம் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment