Thursday, September 26, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு கிடையாது

ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு கோரும் பொது நல வழக்கு மீதான விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இதைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்குரைஞர் எம்.பழனிமுத்து சென்னை உயர் நீதின்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரே தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத தேர்ச்சி மதிப்பெண் தளர்வை வழங்க வேண்டும். இதர மாநிலங்களில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 முதல் 20 சதவீதம் வரை மதிப்பெண்ணில் தளர்வு வழங்கப்படுகிறது.
அதனால், தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பல்வேறு பிரிவினருக்கும் தகுதி மதிப்பெண் தளர்வு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த மனு, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை (செப்டம்பர் 25) விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு கொண்டு வந்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2012-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.
இந்தத் தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி பெற முடியும். தேர்ச்சி பெற்றவர்களுக்குத்தான் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பில் தெரிவித்தது.
2012-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் 0.37 சதவீதம் பேர் மட்டும் தேர்ச்சி பெற்றனர். மிகக் குறைந்த அளவில் தேர்ச்சி இருந்ததால், ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இதில் 2.99 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஆசிரியர் நியமனத்துக்கு ஆசிரியர் தகுதித் தேர்வே அடிப்படை என்பதால், அதில் தேர்ச்சி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்ந்தெடுக்க வேண்டும் என தமிழக அரசு வழிகாட்டி விதிமுறைகளை அறிவித்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் என்பது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தும் அமைப்பு மட்டுமே. ஆசிரியர் தகுதித் தேர்வின் தகுதி மதிப்பெண்களை நிர்ணயிக்கும் தகுதி மாநில அரசுக்குத்தான் உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான குறைந்த அளவு தேர்ச்சி வீதத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் தளர்த்த முடியாது.
தமிழகத்தில் ஆசிரியராக நியமனம் செய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்குவதற்காகவே இந்த தகுதி மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்ணில் எந்தப் பிரிவினருக்கும் தளர்வு வழங்கக் கூடாது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment