Saturday, September 14, 2013

சமூக விரோதிகளால் இளம் வயதிலேயே தடம் மாறும் மாணவர்கள்

தேனியில் சமூக விரோதிகள் பள்ளி மாணவர்களை மயக்கி தவறான செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் இளம் வயதிலேயே தடம் மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

தேனியில் பழனிசெட்டிபட்டியில் பிள்ளையார் கோயில் பகுதியிலும், தேனியில் சடையாள்கோயில் பகுதியிலும் பள்ளி மாணவர்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தேனி மற்றும் பழனிசெட்டிபட்டி பகுதிகளை சேர்ந்த சில பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தாங்கள் பள்ளிக்கு செல்வதாக பெற்றோர்களிடம் கூறி விட்டு, இங்கு வந்து விடுகின்றனர். சமூக விரோதிகள் சிலரும் இங்கு வந்து விடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து பள்ளி மாணவர்களும், மது அருந்துதல், கஞ்சா புகைத்தல், ஆற்று நீரில் குளித்தல் மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
சில மாணவர்கள் அவ்வப்போது வந்து சென்றாலும், சிலர் இதற்கு அடிமையாகவே மாறி விட்டனர். இது பற்றி பள்ளி ஆசிரியர்களுக்கு தெரிந்ததும், பெற்றோர்களை அழைத்து எச்சரித்துள்ளனர். போலீசாரால் மட்டுமே இக்கொடூர சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும். போலீசாரிடம் இது பற்றி பலமுறை புகார் செய்யப்பட்டும் பலனில்லை.
இது குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: "பள்ளிக்கு செல்லாமல் சீருடையில் ஆற்றுக்கு சென்று மது, கஞ்சா புகைத்து விட்டு சமூக விரோதிகளுடன் கும்மாளம் அடிக்கும் மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்தாமல் இளம் வயதிலேயே தடம் மாறுகின்றனர். இவர்களை சமூக விரோதிகள் தவறாக பயன்படுத்துகின்றனர். இவர்களை திருத்தாவிட்டால் சமூக குற்றவாளியாவார்கள்." என்றனர்.
போலீஸ் அதிகாரிகளிடம் கேட்ட போது, "இது குறித்து பள்ளி நிர்வாகமோ, ஆசிரியர்களோ, பெற்றோர்களோ இதுவரை எங்களிடம் புகார் எதுவும் செய்யவில்லை. தினமும் அங்கு போலீஸ் பீட் போட்டு ரோந்து செல்ல ஏற்பாடு செய்கிறோம்," என்றனர்.

No comments:

Post a Comment