Friday, September 6, 2013

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு லட்சம் மாணவர் சேர்க்கை- டி .சபிதா 

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 558 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா கூறினார்.

பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 370 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள உயர் கல்வி அமைச்சர் பி.பழனியப்பன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார்.
முன்னதாக அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கும் திட்டத்துக்காக மட்டும இதுவரை ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், கலர் பென்சில்கள் உள்ளிட்டவையும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் கல்வித் துறையில் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் இந்த ஆண்டு 18,946 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் 51,752 புதிய ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் பழனியப்பன்.
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா: பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மாணவர்களுக்காக நடமாடும் மன நல ஆலோசனை மையங்கள் உள்ளிட்டத் திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார்.
அரசுத் தொடக்கப் பள்ளிகள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்புகளில் இந்த ஆண்டு புதிதாக ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6,364 பள்ளிகளில் 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள் ஆங்கில வழியில் சேர்ந்துள்ளனர்.
கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காக 56 ஆயிரம் பள்ளிகளில் சுமார் 1.20 கோடி மாணவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அதேபோல், 3.34 லட்சம் ஆசிரியர்களின் தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன. அனைவரும் பயன்படுத்தும் வகையில் இந்தத் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும், என்றார்.
தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 196 பேர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 135 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 25 பேர், ஆங்கிலோ இந்தியன், சமூக நலத் துறைப் பள்ளி ஆசிரியர்கள் தலா 2 பேர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சேர்ந்த 10 ஆசிரியர்கள் என 370 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதைப் பெற்றனர்.
அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, தமிழ்நாட்டுப் பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் சி.என். மகேஸ்வரன், சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் ஆர்.இளங்கோவன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் ஆ.சங்கர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் ஆர்.பிச்சை, அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் க.அறிவொளி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

 

No comments:

Post a Comment