Tuesday, September 10, 2013

நல்லாசிரியர் விருதுக்கு போலீஸ் சான்று : தனியார் பள்ளி நிர்வாகிகள் எதிர்ப்பு

நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள், போலீஸ் ஸ்டேஷன்களில், குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று சான்று பெற வேண்டும் என்பதை அரசு திரும்ப பெறவேண்டும்' என, தனியார் பள்ளி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு நர்சரி - பிரைமரி - மெட்ரிக் - மேல்நிலை பள்ளிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம், கோவையில் நடந்தது.
"தனியார் சுயநிதிப்பள்ளிகளுக்கான குறைந்தபட்ச இடப்பரப்பளவு நிர்ணயிக்க அரசு அமைத்த கமிட்டி அறிக்கையை செயல்படுத்த வேண்டும்; சுயநிதிப்பள்ளிகளுக்கான இரண்டாம் பருவ பாடப்புத்தகத்தை உடனடியாக வழங்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டது. "சுயநிதி பள்ளிகளில் 4,000 பள்ளிகளை மூட உதவித்தொடக்க கல்வி அலுவலர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று வருகிறோம். பொதுப்பணித் துறை, உள்ளூர் திட்டக்குழுமம், உள்ளாட்சி நிர்வாகத்தால் வழங்கப்படும் கட்டட உரிமத்தை, உதவித்தொடக்க கல்வி அலுவலர் குறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. நல்லாசிரியர் விருது பெறுபவர்கள் போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்று சான்று பெறவேண்டும் என்ற உத்தரவை அரசு திரும்ப பெறவேண்டும்' எனவும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தமிழ்நாடு நர்சரி - பிரைமரி - மெட்ரிக் - மேல்நிலை பள்ளிகள் சங்க பொதுசெயலாளர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். மாநில அமைப்புச் செயலர் பாலசுப்ரமணியம், மாவட்ட தலைவர் சாவித்ரி ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment