Wednesday, January 1, 2014

பொறுப்பாளர் நியமனத்தில் வருது மாற்றம்: தேர்வுத்துறை "ரொம்ப ஸ்டிரிக்ட்"

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வின் போது, தேர்வு மையங்களில் முக்கிய பொறுப்புகளுக்கு பணிபுரிய வேண்டிய ஆசிரியர்களை, இனி இயக்குனரே தேர்வு செய்வார். தேர்வுத் துறையில் புதிய விடைத்தாள் அறிமுகம், வினாத்தாள் வினியோகத்தில் மாற்றம், 400 மாணவர்களுக்கு ஓர் தேர்வு மையம் என புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது மேலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தேர்வு மைங்களுக்கான துறை அலுவலர்கள், தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள், அறைக் கண்காணிப்பாளர்கள் என முக்கிய பொறுப்புக்களுக்கான ஆசிரியர்களை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் தேர்வு செய்வர். இந்த ஆண்டு முதல், இந்நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
இதன்படி, பிளஸ் 2 தேர்வுக்கு, பணிமூப்பு அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும்; பத்தாம் வகுப்பிற்கு பட்டதாரி ஆசிரியர் பட்டியலும் தயாரித்து, நேரடியாக இயக்குனருக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போல் தலைமை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள், உதவித் தேர்வாளர்கள் அறைக் கண்காணிப்பாளர்கள், பறக்கும் படையில் இடம் பெறுவோர் பட்டியலை, இயக்குனரே முடிவு செய்வார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் தேர்வுகளில் தேர்வு மையங்களை ஒட்டுமொத்தமாக கண்காணிப்பது, வினாத்தாள் வினியோகம் உட்பட பணிகளை துறை அலுவலர்கள் மேற்கொள்வர். இவர்கள் உட்பட முக்கிய பொறுப்புக்கான ஆசிரியர்களை இனி இயக்குனர்தான் தேர்வு செய்வார். இதனால் ஒரு சில கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி நிர்வாகங்களுக்கும் இடையே நீடிக்கும் "இணக்கமான உறவு" முடிவுக்கு வரும். விதிமீறல் தவிர்க்கப்படும். இவ்வாறு கூறினர்.

No comments:

Post a Comment