Monday, August 19, 2013

குளறுபடியின்றி முடிந்தது டி.இ.டி., தேர்வு: 

தமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு பள்ளிகளில் காலியாக
உள்ள, 15 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தகுதித் தேர்வை, டி.ஆர்.பி., அறிவித்தது. இத்தேர்வுக்கு, 12 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. ஆறு லட்சம் பேர்-  

விண்ணப்பித்தனர். தகுதியானவர்களுக்கு, அனுமதி சீட்டு, கடந்த, 6ம் தேதி, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும், டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு, 1,060 மையங்களில் நேற்று நடந்தது. இத்தேர்வு எழுத, 4,11,635 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 4,00,077 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்; 11 ஆயிரத்து 558 பேர் தேர்வு எழுதவில்லை. ஆண்கள், 1,18,881 பேரும், பெண்கள், 2,92,754 பேரும் தேர்வு எழுதினர். தேர்வு எழுதாதோர், 2.80 சதவீதமாகும். சென்னையில், 26,096 பேர் விண்ணப்பித்தனர். இதில், 24,782 பேர் தேர்வு எழுதினர்; 1,314 பேர் தேர்வு எழுதவில்லை. காலை, 10:00 மணிக்கு தேர்வுகள் நடைபெற இருந்த நிலையில், காலை, 8:00 மணி முதலே மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல ஆரம்பித்தனர். பெரும்பாலான மையங்களில், தேர்வு எழுதச் சென்ற பெண்கள், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்தனர். கர்ப்பிணி பெண்களும் அதிகளவில் தேர்வு எழுதினர். டி.இ.டி., தேர்வு மையங்களை, மாவட்ட கலெக்டர்கள், வருவாய் துறை, கல்வித்துறை அதிகாரிகள், தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்க, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சென்னையில், 1,700 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். 75 பறக்கும் படையினர், மையங்களுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா, இணை இயக்குனர்கள், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் உள்ளிட்டோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு குறித்து, சிந்தாதிரிப்பேட்டை, கல்யாணபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில், தேர்வு எழுதிய ரேவதி ராணி கூறும் போது, ""நான் டி.இ.டி., தேர்வை, இரண்டாவது முறையாக எழுதுகிறேன். ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் எளிமையாக இருந்தன. 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகத்தில் இருந்து, கேள்விகள் வந்திருந்தன. பாடப் புத்தகங்களை தவிர்த்து கேள்விகள் கேட்கப்படவில்லை" என்றார். எழும்பூர், பிரசிடென்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய திருமகள் கூறும்போது, "உளவியல், உயிரியல் பாடங்கள் கடினமாக இருந்தன. தமிழில், இலக்கணம் பிரிவில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கடந்த தேர்வை விட, இந்த தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது" என்றார். பார்வையற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என, 7,974 பேர் நேற்று டி.இ.டி., தேர்வு எழுதினர். இவர்களுக்கு கீழ்தளங்களில் இடவசதிகள் செய்யப்பட்டிருந்தன. கூடுதலாக, 30 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பார்வையற்றோர், உதவியாளர்களைக் கொண்டு தேர்வு எழுதினர். நேற்று முன்தினம் (18ம் தேதி) நடந்த தேர்வை, இரண்டு லட்சம் பேர் எழுதிய நிலையில், நேற்று நடந்த தேர்வை, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதியால், கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. "இரண்டு தாள்களின் உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும்" என, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment