Saturday, August 17, 2013

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ்.  2-ஆம் கட்ட கலந்தாய்வு நிறைவு

 தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வில் மொத்தம் 1,981 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அளித்த அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டி.எஸ். இடங்கள் ஆகிய அனைத்தும் நிரம்பி விட்டன. சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் அளித்த 838 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 9 காலியிடங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்ட கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் (ஆகஸ்ட் 16) முடிவுக்கு வந்தது.
கலந்தாய்வின் கடைசி தினமான வெள்ளிக்கிழமையன்று 30 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களுக்கு கலந்தாய்வு நசுயநிதி டைபெற்றது. கலந்தாய்வு முடிவில் பழங்குடி வகுப்பினருக்கு (எஸ்.டி.) உரிய அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில், 9 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.
1,983 பேருக்கு...அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 356 மாணவர்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் அளித்த அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களில் சேர 714 மாணவர்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர 84 மாணவர்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் அளித்த அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர 829 மாணவர்கள் என மொத்தம் 1,983 பேருக்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வில் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.
கல்லூரிக்குச் செல்ல வேண்டிய நாள்: அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் வரும் 19-ஆம் தேதி உரிய மருத்துவக் கல்லூரிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் வரும் 21-ஆம் தேதி உரிய சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டும்.
சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடத்துக்கு சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் வரும் 23-ஆம் தேதி உரிய சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி மருத்துவ மாணவர் சேர்க்கை வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிதான் முடிவுக்கு வரும்.
எனவே அகில இந்திய ஒதுக்கீட்டு மூலம் கிடைக்கும் எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், மாணவர்கள் சேராமல் போவதால் ஏற்படும் காலியிடங்கள், அரசு-சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவற்றுக்கு செப்டம்பர் முதல் வாரம் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment