Monday, April 28, 2014

அண்ணாப பல்கலை: பி.இ. கலந்தாய்வு விவரங்களை அறிய "3ஜி' அப்ளிகேஷன்

பி.இ. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை மாணவர்கள் எளிதாகத் தெரிந்து கொள்வதற்காக "3ஜி' அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
பி.இ. கலந்தாய்வு கமிட்டி ஒப்புதல் கிடைத்தவுடன், இந்த புதிய நடைமுறை அமலுக்குக் கொண்டுவரப்படும் என பல்கலைக்கழக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
2014-15 கல்வியாண்டுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூன் மூன்றாவது வாரத்தில் தொடங்க உள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் மே 3-ஆம் தேதி தொடங்குகிறது.
"எஸ்.எம்.எஸ். அலர்ட்': கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும் என்பதோடு, எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்கள் அளிக்கும் வசதி கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
அதாவது, கலந்தாய்வுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக மாணவர்களுக்கு கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்பட்டது.
இதற்காக விண்ணப்பத்தோடு அவர்களது செல்பேசி எண்ணும் பெறப்பட்டது.
வழக்கமான அழைப்புக் கடிதம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் லிஸ்ட் ஆகியவற்றோடு இந்த எஸ்.எம்.எஸ். தகவல் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த நடைமுறை இந்த ஆண்டும் தொடரும் என்பதோடு, புதிதாக "டி.என்.இ.ஏ.' என்ற பெயரில் புதிதாக 3ஜி அப்ளிகேஷன் ஒன்றை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த இலவச அப்ளிகேஷனை மாணவர்கள் தங்களுடைய செல்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பின்னர் விண்ணப்ப எண்ணை சமர்ப்பித்தால், கலந்தாய்வு தேதி, நேரம் உள்ளிட்ட மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும் என்கின்றனர் பல்கலைக்கழக நிர்வாகிகள்.

No comments:

Post a Comment