Tuesday, October 28, 2014

போதிய கட்டட வசதியின்றி தரம் உயர்த்தப்பட்ட பள்ளி மாணவர்கள் அவதி

தர்மபுரி மாவட்டத்தில், தரம் உயர்த்தப்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு போதிய கட்டிட வசதியில்லாததால், தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக, மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டமாக தர்மபுரி உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. மாணவ, மாணவியர் சென்றுவர போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தால், பள்ளிகளில் இடை நின்றல் அதிகளவில் காணப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில், அனைத்து பகுதி மக்களுக்கும் கல்வி கிடைக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, படிப்படியாக, தர்மபுரி மாவட்டத்தில் பல கிராமங்கள் மற்றும் மலைக்கிராமங்களில் புதிதாக பள்ளிகள் துவங்கப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்தில், தற்போது 789 தொடக்கப் பள்ளிகள், 89 அரசு மேல்நிலைப் பள்ளிகள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் நலன் கருதி, பல தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன.
கடந்த 2013-2014 மற்றும் 2014-2015ம் கல்வியாண்டில், 18 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எட்டு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில், தரம் உயர்த்தப்பட்ட பல பள்ளிகளில், போதிய வகுப்பறை கட்டிட வசதி இல்லாமல் உள்ளது. இதனால், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் திறந்த வெளியிலும், ஒரே வகுப்பறையிலும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தின், அனைத்து பகுதிகளிலும், சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக, மாணவர்கள், அமர போதிய கட்டிட வசதியின்றி கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஒரே வகுப்பறையில் அதிகளவில் மாணவர்கள் அமர்ந்து வருவதால், பாடங்களை கற்பித்து தருவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, போதிய கட்டிட வசதியை விரைந்து ஏற்படுத்தி தர, மாவட்ட நிர்வாகமும், பள்ளி கல்வித்துறையும் முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment