Wednesday, October 29, 2014

அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் சிதறிக் கிடந்த கூடுதல் விடைத்தாள்கள்

கோவை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத கூடுதல் விடைத்தாள்கள் சிதறிக் கிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு கலைக் கல்லுாரிகளில் 20 இளங்கலை மற்றும் 21 முதுகலை படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. காலை, மாலை என இரு சுழற்சி முறையிலும் 4,500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பொதுவாக, தேர்வு நேரத்தில் ஒரு மெயின் ஷீட் தவிர, கூடுதல் விடைத்தாள்கள் வழங்கப்படுவது வழக்கம்.
தன்னாட்சி அந்தஸ்துள்ள இக்கல்லுாரியில், தனியாக செயல்பட்டுவரும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் வினா, விடைத்தாள்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தேர்வு நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. நவ., 3ம் தேதி பருவத் தேர்வுகள் துவங்கவுள்ள நிலையில், கல்லுாரி வளாகத்தில் பயன்படுத்தப்படாத கூடுதல் விடைத்தாள்கள், குப்பையில் சிதறிக்கிடந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "கூடுதல் விடைத்தாள் கல்லுாரி வளாகத்தில் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற மெத்தனத்தால், மாணவர்கள் முன்னதாகவே விடைகள் எழுதிச்சென்று தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது" என்றார்.
கல்லுாரி முதல்வர் குமரேசனிடம் கேட்டபோது, "தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்திலிருந்து பருவத்தேர்வுக்கு நேரடியாக விடைத்தாள் அனுப்பப்படுகிறது. அகமதிப்பீட்டு தேர்வுக்கு அந்தந்த துறை தலைவர்களிடம் விடைத்தாள்கள் ஒப்படைக்கப்படுகிறது; விடைத்தாள் சிதறிக் கிடந்தது குறித்து விசாரிக்கப்படும். மேலும், வரும் 30ம் தேதி(நாளை) நடக்கும் கவுன்சில் கூட்டத்தில், இதுகுறித்து பேசி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்றார்.

No comments:

Post a Comment