Wednesday, October 29, 2014

அடிக்கடி இடம்பெயர்வதால் பாதிக்கப்படும் கல்வி

தொழில்துறை மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் இங்கு வந்து தங்கி பணியாற்றுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இக்குழந்தைகளின், குடும்பம் இடம் பெயறுவதால் அடுத்த ஓரிரு ஆண்டுகளில், மீண்டும் வேறு பள்ளிகளுக்கு இடம் மாறுகின்றனர். இதனால், குழந்தைகளுக்கு மனதளவில் கல்வி மீதான ஆர்வம் குறைவதோடு, கவனச்சிதறலுக்கும் ஆளாகின்றனர்.
தொழிலில் ஏற்படும் தோல்வி, வேறு பகுதிகளில் தொழில் செய்ய விரும்புவது போன்ற சூழலால், குழந்தைகளின் கல்வியை பற்றி சிந்திக்காமல், பெற்றோர் அடிக்கடி இடம் பெயருகின்றனர் அல்லது குழந்தைகளை பள்ளியில் இருந்து இடைநிறுத்தி விடுகின்றனர்.
பள்ளி மாணவர்களின் கல்வி 80 சதவீதம், இத்தகைய குடும்ப சூழ்நிலையால் மட்டுமே பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
கிராமப்புறங்களை விட, திருப்பூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இது அதிகம் என தெரிய வந்துள்ளது. பெற்றோர்களின் இத்தகைய நடவடிக்கையால், குழந்தைகளுக்கு படிப்பு மீது ஆர்வம் குறையும் என, ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வெவ்வேறு பள்ளிகளில் கல்வி கற்பதால், பொதுத்தேர்வின்போது மாணவர்கள் சிரமப்படுவர்.
கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக உள்ள பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது. அப்பள்ளி மாணவர்களின் பெற்றோருக்கு, ஆசிரியர் மற்றும் உளவியல் நிபுணர்களை கொண்டு, கூடுதல் நேரம் ஒதுக்கி, ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. கல்வியின் முக்கியத்துவம் பற்றி, பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment