Saturday, February 7, 2015

வகுப்பு கட் அடித்து சினிமாவுக்கு சென்ற 17 மாணவர்கள் சஸ்பெண்ட்

திருப்பூரில், வகுப்புக்கு கட் அடித்துவிட்டு, படம் பார்க்கச் சென்ற பள்ளி மாணவர்கள் 17 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த மாதம் நடக்கிறது. இன்று பிளஸ் 2 செய்முறை தேர்வு துவங்குகிறது. இந்நிலையில், திருப்பூர் முதன்மை கல்வி அலுவலர் முருகன், தாராபுரம் ரோடு, யூனியன் மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில், நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தியேட்டர் டிக்கெட் கவுன்டர்களில், பள்ளி சீருடையில் மாணவர்கள் நின்றிருப்பதை பார்த்தார்.
போலீசார் உதவியுடன் பிடித்த கல்வித்துறை அதிகாரிகள், முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 17 மாணவர்கள் பிடிபட்டனர். உடனடியாக, அவர்களை சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அம்மாணவர்கள், தங்களது பெற்றோரை அழைத்து வரவும் அறிவுறுத்தப்பட்டது.
முதன்மை கல்வி அலுவலர் முருகன் கூறுகையில், "பள்ளியில், திருப்பு தேர்வு நடந்து வருகிறது; நாளை (இன்று) செய்முறை தேர்வும், அடுத்த மாதத்தில், பொதுத்தேர்வும் நடைபெற உள்ளது. இந்நிலையில், வகுப்புக்கு வராமல், பள்ளி சீருடையில், மாணவர்கள் தியேட்டருக்கு படம் பார்க்க சென்றுள்ளனர்.
அவர்களது ஒழுங்கீன செயலுக்காக, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தேர்வு நேரத்தில், மற்ற மாணவர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment