Wednesday, February 11, 2015

7.6௦ லட்சம் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து

கோவை மாவட்டத்தில், சுகாதாரத்துறை சார்பில், 7.6௦ லட்சம் பள்ளி மற்றும் அங்கன்வாடி மாணவர்களுக்கு குடல்புழு நீக்க மருந்து இன்று வினியோகிக்கப்படவுள்ளதாக, துணை இயக்குனர் சோமசுந்தரம் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை சார்பில், ஒன்று முதல், 19 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தேசிய குடல் புழு நீக்க நாளான இன்று அனைத்துக் குழந்தைகளுக்கும் குடல் புழு நீக்க மருந்து (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு அல்பெண்டசோல் மாத்திரையை, மதிய உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து வழங்கவுள்ளனர்.
இம்மாத்திரையை, நன்றாக சப்பிய பிறகு, மென்று சாப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர்கள் நேரடியாக மேற்பார்வையிட உத்தரவிடப்பட்டுள்ளது.நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரையை வழங்கக்கூடாது. மாத்திரையை அப்படியே விழுங்கச்செய்யக் கூடாது. குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குடல் புழு மாத்திரையை வீட்டுக்குக் கொடுத்தனுப்பக் கூடாது என, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், "கோவையில், 3000க்கும் மேற்பட்ட பள்ளி, அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவர்கள், ஏழு லட்சத்து, 60 ஆயிரம் பேருக்கு, குடல் புழு நீக்க மருந்து வினியோகிக்கப்பட உள்ளது. இதனால், மாணவர்களுக்கு ரத்த சோகை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டு, ஆரோக்கியமான வளர்ச்சி பெற உதவும். மாத்திரை வினியோகம் குறித்து, பள்ளிக் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
பக்கவிளைவுகள் இருந்தால்...
இன்று விடுபட்ட குழந்தைகள் இருப்பின், சிறப்பு முகாம் பிப்., 13-ல் நடக்கிறது. இம்மாத்திரை, அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது என்றாலும், அதிகமாக குடல் புழு இருக்கும் குழந்தைகள், இந்த மருந்தை உட்கொள்ளும்போது லேசான மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். இதுபோன்ற, பக்கவிளைவுகள் ஏற்படின், திறந்தவெளி, காற்றோட்டமானப் பகுதியில் படுக்கவைக்க வேண்டும்.
சுத்தமான குடிநீர், உப்பு சர்க்கரைக் கரைசல் கொடுத்து கண்காணிக்க வேண்டும். பக்க விளைவுகள் அதிகமானாலோ அல்லது தொடர்ந்து இருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். மருத்துவ அலுவலர், செவிலியர் போன் எண்களை தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment