Sunday, February 1, 2015

மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளி மாணவர்களிடம் டெங்கு நோய் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவியதையடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்கள் மத்தியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
உத்தரவில் கூறியிருப்பதாவது: பள்ளிகளின் சுகாதாரம் குறித்து, தலைமை ஆசிரியர்கள் ஆய்வறிக்கை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலரிடம் பிப்., 8க்குள் ஒப்படைக்க வேண்டும். பள்ளி, வீடுகளில், திறந்தவெளியில் தண்ணீர் தேங்கக்கூடாது.
இதுதொடர்பாக, இறைவணக்கம் பாடும் நேரங்களில், மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். சுற்றுச்சுவர் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால், உடனடியாக அகற்ற வேண்டும். பள்ளி வளாகத்தில் கொசுத்தொல்லை இருந்தால், சுகாதாரத்துறையை அழைத்து துப்புரவு பணி செய்யவேண்டும். மாணவர்களுக்கு, சுகாதாரமான குடிநீர் பள்ளிகளில் வழங்க வேண்டும்.
கழிப்பறையை, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். சத்துணவு கூடங்களில் கழிவு, தண்ணீர் தேங்குவது கூடாது. டெங்கு நோய் பாதிப்பு, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதார நடவடிக்கை குறித்த அறிவிப்பு பலகை, விழிப்புணர்வு பதாகைகள் மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை கட்டாயம் வைக்குமாறு, தலைமை ஆசிரியர்களுக்கு வலியுறுத்த வேண்டும்.
தங்கள் வீடுகளுக்கு அருகில் உபயோகமற்ற பிளாஸ்டிக் பொருட்கள், காலி டயர், தேங்காய் தொட்டி போன்றவை தேங்காமல் அகற்றுமாறு, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். நோய் பாதிப்பு அறிகுறி தெரிந்தால், அம்மாணவர் அல்லது மாணவியை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
டெங்கு நோய் குறித்து பள்ளிகளில் மாணவ, மாணவியர் மத்தியில் தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதுகுறித்த தகவல் அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக, பள்ளி கல்வித்துறைக்கு விரைவில் அனுப்ப வேண்டும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment