Thursday, February 12, 2015

நாடு முழுவதும், பின்தங்கிய மாவட்டங்களில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்கும் வசதி : பட்ஜெட்டில் அறிவிக்க மத்திய அரசு பரிசீலனை

நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில், ஒரே வளாகத்தில் எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிக்கும் வசதியை அளிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பின்தங்கிய மாவட்டங்கள்

நாடு முழுவதும், கல்விரீதியாக பின்தங்கிய மாவட்டங்கள் பரவலாக உள்ளன. அங்குள்ள மாணவர்கள், உயர் கல்வி படிப்பதற்காக, பெரிய நகரங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அத்தகைய மாணவர்களை கருத்தில் கொண்டு, அவர்கள் ஒரே கூடாரத்தில், எல்.கே.ஜி. முதல் முதுகலை பட்டம் வரை படிப்பதற்கான வசதியை அளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

பட்ஜெட்

வருகிற 28-ந் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இந்த திட்டப்படி, மத்திய அரசும், கல்வித்துறையில் முதலீடு செய்யும் தனியாரும் பாதிக்குப்பாதி என்ற விகிதத்தில் செலவை பகிர்ந்து கொண்டு, கல்வி நிறுவனங்களை கட்டும் பணியை மேற்கொள்வார்கள்.

அந்த கல்வி நிறுவனத்துக்கான நிலம், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் இலவசமாக கேட்டுப் பெறப்படும்.

இத்தகைய கல்வி நிறுவனங்களில், எல்.கே.ஜி.யில் சேரும் மாணவருக்கு அடுத்தடுத்த வகுப்புகளுக்கான சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்படும். அதனால், அவர் முதுகலை பட்டம் வரை ஒரே இடத்தில் படிக்க ஏதுவாக இருக்கும்.

இத்தகைய திட்டம், ஏற்கனவே சில மாநிலங்களில் உள்ளது. சத்தீஷ்கார் மாநில அரசு கூட, பழங்குடியினர் கல்வியை மேம்படுத்த இந்த திட்டத்தை சமீபத்தில் அறிவித்தது.

விஸ்வபாரதி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஏற்கனவே இந்த நடைமுறை உள்ளது.

கூடுதல் வரி உயர்கிறது

இதற்கிடையே, இதுபோன்ற கல்வி திட்டங்களுக்கான நிதி தேவைக்காக, கல்வி மீது விதிக்கப்படும் ‘செஸ்’ வரியை ஒரு சதவீதத்தில் இருந்து இரண்டு சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதன்மூலம், மத்திய அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இதுபற்றி பட்ஜெட்டில் அறிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment