Wednesday, November 13, 2013

குரூப்-1 பணி நியமன குளறுபடி: டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதிலளிக்க உத்தரவு

குரூப்-1 தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், தற்காலிகமாக தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யவும் தாக்கலான வழக்கில், டி.என்.பி.எஸ்.சி., செயலர் பதில் மனு செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

திருச்சி, தில்லைநகர், சிந்தியா நேபிள் தாக்கல் செய்த மனு: பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த நான், பி.இ., படித்துள்ளேன். 2007 முதல் 2011 வரை, டி.எஸ்.பி., உட்பட, குரூப் - 1 காலிப் பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடந்த தேர்வில் பங்கேற்றேன். எனக்கு, 354.50 மதிப்பெண் கிடைத்தது. என்னை விட குறைந்த மதிப்பெண் எடுத்தவர்களுக்கு, பணி நியமனம் வழங்கப்பட்டது.
தற்காலிகமாக தேர்வானவர்களின் பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், முதலில் வெளியான அறிவிப்பிற்கு மாறாக, தமிழ் வழியில் படித்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. போதிய விவரம் இல்லை. பட்டியலை ரத்து செய்து, என் பெயரை சேர்க்க வேண்டும். புதிய பட்டியல் வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிபதி, எஸ்.நாகமுத்து முன் மனு விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் ஆஜரானார்.
டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தாக்கல் செய்த பதில் மனு: மொத்தம், 131 காலிப் பணியிடங்களுக்கு, பிப்., 14ல் கவுன்சிலிங் நடந்ததில், 126 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது; மூவர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை; ஒருவர், &'வேலை வேண்டாம்&' என, மறுத்துவிட்டார். தமிழ் வழியில் படித்த, பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில், ஒருவருக்கு உடல் தகுதி இல்லை. அவருக்கு டி.எஸ்.பி., பணி வழங்க இயலவில்லை. இதர பிற்பட்டோர் பிரிவில், மனுதாரரை விட, அதிக மதிப்பெண் பெற்றவருக்கு பணி வழங்கப்பட்டு உள்ளது.
தமிழ் வழியில் படித்த, மனுதாரரை விட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி, 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
"அரசுத் தரப்பு விளக்கம், திருப்தியாக இல்லை; இடஒதுக்கீட்டில், சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலை பின்பற்றவில்லை; அரசின் நிலை பற்றி தெளிவாக தெரிவிக்கவில்லை. டி.என்.பி.எஸ்.சி., செயலர், நவ., 26ல் பதில் மனு செய்ய வேண்டும்" என, நீதிபதி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment