Thursday, November 7, 2013

செவ்வாய் கிரகத்தை அடைய மங்கள்யானுக்கு 10 மாதங்கள் ஏன்?

பூமியில் இருந்து சந்திரன் இருக்கும் தூரத்தை விட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில் செவ்வாய் கிரகம் இருப்பதால், "மங்கள்யான்" செயற்கைகோள், செவ்வாய் கிரகத்தை அடைய, 10 மாதங்களாகும்" என "அறிவியல்புரம்" இணையதள ஆசிரியர் என்.வி.ராமதுரை கூறினார்.

"மங்கள்யான்" பயணம் குறித்து அவர் கூறியதாவது: பூமியில் இருந்து, 4 லட்சம் கி.மீ., தூரத்தில் சந்திரன் உள்ளது. சொல்லப் போனால், பூமி என்ற பங்களாவின், "அவுட் ஹவுஸ்" போல சந்திரன் உள்ளது. ஆனால், இதைவிட, ஆயிரம் மடங்கு அதிக தூரத்தில், செவ்வாய் கிரகம் உள்ளது.
பூமியும், செவ்வாய் கிரகமும், தனித் தனியான நீள்வட்டப் பாதையில், சூரியனை சுற்றி வருகின்றன. சூரிய குடும்பத்தின் சுற்றுப்பாதையில், இந்த கிரகங்கள் சுற்றி வரும் வேகம், ஒரே சீராக உள்ளது. பூமியும், செவ்வாயும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், அருகில் நெருங்கி வரும். இதைக் கணக்கில் கொண்டே "மங்கள்யான்" செயற்கைகோள், தற்போது செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படுகிறது.
இப்பணி இந்திய விண்வெளி ஆய்வில் மிக முக்கியமான வெற்றி. பூமியும், செவ்வாய் கிரகமும் அருகில் இருக்கும் போது தான் குறைவான எரிபொருள் செலவில், செயற்கை கோளை அனுப்ப முடியும். மேலும், செயற்கைகோளுக்கும், பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கும், தகவல் தொடர்பு சீராக இருக்கும். தூரம் அதிகரிக்கும் போது, தகவல் தொடர்பு சரியாக இருக்காது.
எனவே பூமியும், செவ்வாயும் அருகில் இருக்கும் காலத்தைக் கணக்கில் கொண்டு, "மங்கள்யான்" செயற்கைகோளை, தற்போது ஏவுகின்றனர். பூமியின் சுற்று வட்ட பாதையை விட்டு வெளியேறும் வரை தான், செயற்கைகோளுக்கு எரிபொருள் தேவைப்படும். அதன்பின், ஆற்று நீரில் செல்லும் படகு போல செயற்கைகோள் விண்வெளியில் மிதந்தபடி சென்று கொண்டு இருக்கும்.
பூமியும், செவ்வாய் கிரகமும் தனித் தனியான நீள்வட்டப் பாதையில், சூரியனை சுற்றி வருகின்றன. முதலில், பூமியின் சுற்று வட்டப் பாதையிலிருந்து வெளியேறி, செவ்வாய் கிரகம், சூரியனை சுற்றும் நீள்வட்டப் பாதைக்கு, செயற்கை கோளை கொண்டு செல்ல வேண்டும். அதன் பின்பே, செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட சுற்று வட்ட பாதையில் செயற்கைகோளை சேர்க்க முடியும்.
பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையே உள்ள தூரத்தைக் கடக்க, 10 மாதங்களாகும். எனவே, "மங்கள்யான்" செயற்கைகோள் செவ்வாய் கிரகத்தை அடையும் காலத்தை, அது ஏவப்பட்ட நாளிலிருந்து, 10 மாதங்களாக கணக்கிட்டு உள்ளனர். இவ்வாறு, ராமதுரை கூறினார்.
இந்திய விஞ்ஞானிகளின் சாதனை: செவ்வாய் பற்றி ஆராய்ச்சிகளில், பல உலக நாடுகளும் ஈடுபட்டு வரும் நிலையில், இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஐரோப்பா ஆகிய மூன்று நாடுகளால் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த பட்டியலில், இந்தியா நான்காவது நாடாக இணைந்துள்ளது. அதுவும், முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட செயற்கைகோளை, முதல் முயற்சியிலேயே வெற்றி பெறச் செய்த, இந்திய விஞ்ஞானிகளின் சாதனை, உலக அரங்கில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் மங்கள்யான் போலவே, அமெரிக்காவும், "மாவேன்" என்ற செயற்கைகோளை, வரும், 18ம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இந்திய செயற்கைகோள், செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையை அடையும் அதே நாளில், மாவேனும் அந்த இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment