Monday, November 4, 2013

இருக்கை வசதி இல்லாததால் தரையில் அமர்ந்து கற்கும் மாணவிகள்

அமர்வதற்கு பெஞ்ச் இல்லாததால், அரசு பள்ளி மாணவிகள், தினமும் பரிதவிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
ஈரோடு, வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கல்வி கற்போர், குறிப்பாக மாணவிகள் கல்வி கற்பதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காக, தமிழக அரசு இலவச சைக்கிள், பாட புத்தகங்கள், காலணி உள்ளிட்டவை மட்டுமின்றி மாணவிகள் அமரும் வகையில் டெஸ்க், பெஞ்ச் போன்றவற்றையும் வழங்கி வருகிறது.

இதனால் நடுநிலை வகுப்பு முதல் மேல்நிலை வரையிலான மாணவிகள், சிரமமின்றி பயில்கின்றனர். ஆனால் வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், எட்டாவது, ஒன்பதாவது ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவிகள், வகுப்பறையில் தரையில் அமர வைக்கப்படுகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாகவே மாணவிகள், இதுபோன்று தரையில் அமர்ந்து தான் ஆசிரியர் நடத்தும் பாடங்களை கவனித்தல், எழுதுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். தரையில் அமர வைத்து எழுத வைப்பதால், பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. ஆனால் ஆசிரியை, தலைமை ஆசிரியைக்கு பயந்து மாணவிகள், வேறு வழியின்றி தரையில் அமர்ந்தே பாடங்களை கற்கின்றனர்.
எவ்வளவு சிறப்பாக மாணவிகள் படித்து, தேர்வு எழுதினாலும், விடையை தெளிவாக, சிறந்த கையெழுத்துடன் எழுதினால் மட்டுமே முழுமையாக மார்க் பெற முடியும். சிறந்த கையெழுத்து, ஒரே நாளில் வருவதில்லை. முறையாக அமர்ந்து, சரியான முறையில் எழுத பழகினால் மட்டுமே, கையெழுத்து சீரானதாக வரும் என்பதை பள்ளிக் கல்வித்துறை உணர்ந்து பெஞ்ச், டெஸ்க்களை உடன் வழங்க வேண்டும்.
அதுபோல் தொலைதூரங்களில் இருந்து மாணவிகள் சைக்கிளில் வருகின்றனர். தங்கள் சைக்கிளை, மாணவிகள் நிறுத்த போதிய இடவசதி இல்லை. எனவே சைக்கிள்களை ரோட்டோரம் நிறுத்தி செல்வதை, கடந்த பல ஆண்டுகளாகவே வாடிக்கையாக கொண்டுள்ளனர். ரோட்டோரம் நிறுத்தப்படும் சைக்கிள்கள், அவ்வப்போது காணாமல் போவது வாடிக்கையாகிறது.
மாணவிகள் வசதிக்காக அரசு விலையில்லா சைக்கிள் வழங்குகிறது. ஆனால் மாணவிகள் வரும் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க இட வசதியின்றி பள்ளி நிர்வாகம் உள்ளது. மாவட்ட பள்ளி கல்வி துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, மாணவிகள் சிரமமின்றி கல்வி கற்க ஏதுவாக டெஸ்க், பெஞ்ச்களை வழங்க வேண்டும்.
மேலும் சைக்கிளை பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பதே பெற்றோர்கள் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Post a Comment