Monday, January 19, 2015

ஜன. 22-இல் அரசுப் பணியாளர் ஒரு நாள் விடுப்புப் போராட்டம்

அகவிலைப்படியின் 50 சதவிகிதத்தை அடிப்படை ஊதியத்தில் இணைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் முழுவதும் வரும் 22-ஆம் தேதி அரசுப் பணியாளர்கள் ஒரு நாள் தற்செயல் விடுப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இதுதொடர்பாக, அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச் செயலர் கு. பாலசுப்பிரமணியன், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் கூறுகையில், தற்போது, அகவிலைப்படி மட்டும் 107 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. எனவே, அனைத்துத் துறை அரசு ஊழியர்களின் 50 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைக்க வேண்டும். இடைக்கால நிவாரணமாக 20 சதவிகிதம் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டம், ஊழியர்களுக்கு பாதுகாப்பானது அல்ல. அந்தப் பணம் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்யப்படுகிறது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்தப்படுகிறது.
அனைத்துத் துறைகளையும் சேர்ந்த 80 சதவிகிதம் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார். பேட்டியின்போது, சங்க மாநிலத் தலைவர் கு. பால்பாண்டியன், தேசியக் குழு உறுப்பினர் ம. பரமசிவம், மாவட்டத் தலைவர் மு. கவியரசன் ஆகியோர் இருந்தனர்.

No comments:

Post a Comment