Wednesday, January 7, 2015

பள்ளி மாணவியின் ஆய்வு கட்டுரை தேசிய விருதுக்கு தேர்வு

திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளி மாணவியின் ஆய்வு கட்டுரை, தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசு அறிவியல் தொழில்நுட்பத்துறை, ஆண்டுதோறும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்துகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், கடந்தாண்டு நவ., 22ல் திருப்பூர் ஏஞ்சல் பொறியியல் கல்லூரியில் நடந்த மாவட்ட தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், 6 கட்டுரைகள் தேர்வாகின.

அவை, டிச., 5, 6 மற்றும் 7ல் புதுக்கோட்டையில் நடந்த மாநில மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. காங்கயம் ஜேசீஸ் மெட்ரிக் பள்ளி, திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் மாணவர்களின் ஆய்வு கட்டுரைகள், தேசிய அறிவியல் மாநாட்டுக்கு தேர்வாகின. கடந்த மாதம் 27 முதல் 31 வரை, பெங்களூருவில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில், செஞ்சுரி பவுண்டேசன் பள்ளி மாணவி சர்விகா ஆய்வு கட்டுரை, தேசிய அளவிலான விருதுக்கு தேர்வாகி உள்ளன.
நாடு முழுவதும் இருந்து 500 ஆய்வு கட்டுரைகள், மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், ஆய்வுக்குழு பரிசீலித்து, 20 கட்டுரைகளை தேசிய அளவில் சிறந்ததாக தேர்வு செய்தது. அதில், திருப்பூர் செஞ்சுரி பவுண்டேசன் பிளஸ் 1 மாணவி சர்விகாவின், போஸ்டர் பிரசண்டேசன் என்ற ஆய்வு கட்டுரையும் ஒன்று.
ஆய்வு கட்டுரை சமர்ப்பித்த 20 மாணவ, மாணவியரும், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். அங்கு, 10 நாட்கள் தங்கும் அவர்கள், அறிவியல் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், நவீன அறிவியல் ஆய்வகங்களை பார்வையிட உள்ளனர்.
அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, "கடந்த 60 ஆண்டுகளில், பஞ்சாங்கத்தில் கூறியபடி, குறிப்பிட்ட காலகட்டத்தில் மழை பெய்ததா, காற்று வீசியதா, பருவநிலை மாற்றங்கள் நடந்ததா, பஞ்சம் ஏற்பட்டதா என்பதை அடிப்படையாகக் கொண்ட ஆய்வை, மாணவி சர்விகா குழு நடத்தியது. 1950 முதல் 2010 பெய்த தமிழக மழை பொழிவு நிகழ்வுகள், காலநிலை மாற்றங்கள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன" என்றார்.

No comments:

Post a Comment