Tuesday, January 6, 2015

இப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு பள்ளி!

பொதுத்தேர்வு என்றாலே மாணவர்களை பாடம் படிக்கும் பொம்மைகளாக நினைக்கும் சில பள்ளிகளில் இருந்து விலகி வித்தியாசமாக செயல்படுகிறது மதுரை செயின்ட் பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி.

மைதானத்தில் எப்போது நுழைந்தாலும் பனியன் அணிந்த மாணவப் பட்டாளங்களின் விளையாட்டும், துள்ளிஓடும் வேகமும் நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ள வைக்கும். எறிபந்தோ, கைப்பந்தோ, கால்பந்தோ... கிடைத்த பந்துகளை பிடித்து ஓடிக் கொண்டே இருக்கின்றனர் மாணவர்கள்.
அதனால்தான், ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட, உடல் வலிமையாய், தோள் வலிமையாய் நம்மை மிரட்டுகின்றனர். அரையாண்டுத் தேர்வை பற்றி அலட்டிக் கொள்ளாமல் மாணவர்கள் மைதானத்தில் விளையாடியது ஆச்சரியம் தர அமைதியாய் பேசினார் தலைமையாசிரியர் அமல்ராஜ்: எங்கள் பள்ளியில் ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் படிக்கின்றனர். அத்தனை பேருக்குமே உடற்பயிற்சி பாடவேளையை கட்டாயமாக்கியுள்ளோம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு படிக்க வேண்டும் என்று சொல்லி வகுப்பறையில் உட்கார முடியாது. எந்நேரமும் படிப்பு என்பதை நாங்களும் அனுமதிப்பதில்லை. உடல் ஓடியாடி விளையாடினால்தான் உள்ளம் புத்துணர்வாக இருக்கும். அப்போது தான் பாடமும் மனதில் ஏறும். மாணவர் உடல்நலம் இல்லையென்றால் மைதானத்தில் தான் ஓரமாக உட்கார வேண்டும்.
உடற்பயிற்சி பாடவேளை இருக்கும் நாளில் கண்டிப்பாக ட்ரவுசர், விளையாட்டு பனியன் அணிந்து வர வேண்டும். வெள்ளை சட்டையுடன் விளையாடினால் மீண்டும் அதை அணிந்து வகுப்பறையில் உட்காருவது கஷ்டம். உடல் கசகசத்து விடும் என்பதால் பனியன் அணிந்து விளையாட அனுமதித்துள்ளோம்.
வகுப்பறையில் சட்டையை கழற்றி வைத்து விட்டு மைதானத்திற்குள் மாணவர்களுக்கு பிடித்தமான விளையாட்டில் ஈடுபடுவர். படிப்பைத் தாண்டி மாணவர்கள் திறமையாக இருந்தால்தான் படிப்பிலும் சாதிக்க முடியும், என்றார்.
பள்ளியில் விளையாட்டு சரி... பதக்கங்கள்... அதையும் தக்க வைக்கிறோம் என்கிறார் உடற்கல்வி இயக்குனர் செல்வராஜ்: 22 ஆண்டுகளாக தடகளம் மற்றும் கூடைபந்து பயிற்சி அளிக்கிறேன். மாநில அளவில் கூடைபந்து போட்டிகளில் மூன்று முறை மூன்றாமிடம் பெற்றுள்ளோம். தேசிய பள்ளிகள் விளையாட்டு குழும பிரிவில் நான்காம் இடம் பெற்றது பெரிய விஷயம்.
பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர் ஒத்துழைப்பு இருப்பதால் மாணவர்களுக்கு முழுமையான உடற்பயிற்சி அளிக்க முடிகிறது. ஆசிரியர் ராதாகிருஷ்ணன், "ஹேண்ட்பால் அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறேன். உடற்பயிற்சி ஆசிரியராக இருந்து தொழிற்கல்வி ஆசிரியராக மாறினாலும் மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறேன்.
2005ல் ஹேண்ட்பால் அறிமுகப்படுத்தியபோது, மாநில அளவில் பங்கேற்க தகுதி பெற்றோம். திங்கள் முதல் சனி வரை காலை 6.30 முதல் 8 மணி வரை, மாலை 4.30 முதல் 6 மணி வரை மைதானத்தில் பயிற்சி அளிக்கிறோம். தொடர் பயிற்சி இருந்தால்தான் மாணவர்கள் உடல் வலுவும், தொழில்நுட்ப அறிவும் பெற முடியும்.
மாணவர்களின் விளையாட்டுத் திறமையை மேம்படுத்த அவ்வப்போது பிற பள்ளி அணிகளோடு மோதச் செய்கிறோம். விளையாட்டின் மூலம் மாணவர்களுக்கு வெற்றி, தோல்வி, அணியாக செயல்படும் மனப்பான்மை என வாழ்க்கைக் கல்வியைக் கற்றுத் தருகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment