Monday, January 12, 2015

"தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்"

தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும்" என்று கன்னியாகுமரியில், திருக்குறள் திருப்பயணத்தை தொடங்கிய தருண்விஜய் எம்.பி.,கூறினார்.


திருக்குறளின் பெருமைகளையும், திருவள்ளுவரின் சிறப்புகளையும் நாடுமுழுவதும் அறியும் வகையில் திருக்குறள் திருப்பயணத்தை தொடங்குவதாக பா.ஜ.,எம்.பி தருண்விஜய் அறிவித்திருந்தார்.
கன்னியாகுமரியில் நேற்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது: இந்தியாவில் பலதரப்பட்ட மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ளன. அவற்றையெல்லாம் ஒருகுடைக்குள் கொண்டுவர வேண்டும். வடஇந்தியா முழுவதும் தமிழ்மொழியின் புகழையும், செறிவையும் பரப்ப வேண்டும்.
அதற்கு இன்று கன்னியாகுமரியில் இருந்து இந்த திருப்பயணத்தை தொடங்கியுள்ளேன். இதற்கு ஏதேனும் உள்நோக்கம் இருக்கலாம் என்று எண்ணலாம். தமிழர்களின் கலாச்சாரத்தை நாடுமுழுவதும் பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கமே தவிர வேறு எதுவும் இல்லை.
வடநாட்டை சேர்ந்த துளசிதாஸ், அசோகர் போன்றோரை பற்றி அறிந்திருந்தால் மட்டும் போதாது. தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளுவர், பாரதியார், சேர,சோழ,பாண்டியன், ராஜராஜசோழன் ஆகியோரையும் அனைவரும் தெரிந்திருந்தால் மட்டுமே இந்தியா முழுமையடையும். புது சமுதாயம் அமைப்பதற்கு என்னுடைய சொந்த மாநிலமான உத்ரகாண்ட்டின் டேராடூனில் தமிழ் பயிற்சிமையம் அமைக்கப்படும்.
நாடுமுழுவதும் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லுரிகளில் திருக்குறளை பாடதிட்டமாக வைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். இதற்கு பலமாநிலங்களில் ஆதரவு பெருகிவரும் நிலையில், பஞ்சாப் அரசு அதற்கு உத்திரவாதம் அளித்து பெருமை சேர்த்துள்ளது.
திருக்குறளின் பெருமையை போற்றும் வகையில் அனைவரும் அந்தந்த மாநில மொழிகளில் ஆட்டோ, கார், டூவிலர் போன்ற வாகனங்களில் திருக்குறளை எழுதிவைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கும், அடிப்படைவாதத்திற்கும் திருக்குறள் நல்ல தீர்வாக அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment