Thursday, January 22, 2015

தவறான கணக்கு காட்டி மாணவர் விடுதியில் முறைகேடு?

மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் விடுதியில் கூடுதல் மாணவர்கள் தங்கியிருப்பதாக கணக்கு காட்டி அரசு வழங்கும் உணவுப்படியில் முறைகேடு செய்வதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் அரசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்கி படிக்க பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதி செயல்படுகிறது. ஆதி திராவிடர் விடுதி 48, பிற்பட்ட, மிக பிற்பட்டோர் விடுதி 46 என, 94 விடுதிகள் செயல்படுகின்றன. இங்கு, தங்கி படிக்கும் மாணவர் களுக்கு உணவு வழங்க விடுதிக்கு ஒரு வார்டன், சமையலர், காவலாளி உள்ளனர்.
விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு மட்டுமே உணவு வழங்க அரசு நிதி வழங்குகிறது. கல்வி ஆண்டு துவக்கத்தில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையை வைத்து, பள்ளி விடுதி மாணவருக்கு மாதம் ரூ.755, கல்லூரி மாணவருக்கு மாதம் ரூ.855 வீதம் அரசு வழங்குகிறது. பெரும்பாலான விடுதிகளில் தற்போது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந் தாலும், பழைய மாணவர்கள் எண்ணிக்கையே தொடர்வதாக சில விடுதிகளில் கணக்கு காண்பித்து அரசு பணத்தை முறை கேடாக எடுப்பதாக பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.
மாதந் தோறும் ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் இதனை கண்டறிந்து, மாணவர்கள் இல்லாத பட்சத்தில் அரசு வழங்கும் நிதியை நிறுத்தி வைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாததால் இந்த முறைகேடு தொடர்கிறது.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் யுவராஜ் கூறுகையில்,“ விடுதிகளில் அரசு வழங்கும் நிதிப்படி மாணவர்கள் இருப்பு குறித்து தனி தாசில்தார்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் முறைப்படி ஆய்வு செய்து, இது போன்ற புகார் வரும் விடுதி வார்டன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment