Tuesday, January 27, 2015

பொது கவுன்சிலிங்கின்போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார்

மதுரை தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களின் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதம் ஏற்படுவதால் பொது கவுன்சிலிங்கின் போது சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது.
மாவட்டத்தில் தொடக்க கல்வித்துறைக்கு உட்பட்ட 15 கல்வி யூனியன்களில் 5 ஆயிரம் ஆசிரியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இவர்களுக்கு டிச.31ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு ஜன.1ல் பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் வெளியிட வேண்டும்.
பட்டியலை ஜனவரியில் வெளியிட்டால் தான் தவறுகள் இருந்தால் அதை சரிசெய்து ஏப். அல்லது மே மாதம் நடக்கும் பொது கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் பங்கேற்க முடியும்.
குறிப்பாக பட்டியல் தயாரிப்பின்போது ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள், பணிவரன்முறை செய்யப்பட்ட நாள், உயர்கல்வித் தகுதி உட்பட கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் ஜன., முடியும் தருவாயிலும் நேற்றுவரை தொடக்க கல்வித் துறையின் பட்டியல் தயாரிப்பு பணி மந்தமாக உள்ளதாக ஆசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜன.1ல் முன்னுரிமை பட்டியல் வெளியிட்டால் தான் அதை சரிபார்த்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனுமதி பெறுவது முதல் பொது கவுன்சிலிங்கில் பங்கேற்பது வரை பல கட்ட பணிகளை சரியான காலத்திற்குள் முடிக்க முடியும். இல்லையென்றால் கவுன்சிலிங்கின்போது ஏதாவது ஓர் சிக்கல் ஏற்பட்டு பதவி உயர்வு பாதிக்கும். பின் கோர்ட்டில் வழக்குகள் தொடர வேண்டி வரும். எனவே முன்னுரிமை பட்டியல் தயாரிப்பு பணியில் தாமதத்தை தவிர்த்து விரைவில் வெளியிட வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment