Sunday, May 4, 2014

10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்

வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் (எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்த நிலையில் அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் பழைய பாடத்திட்டத்தின் படி பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.
பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் புத்தகச் சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வித் திட்டத்தை 2012- - 13ம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை நடைமுறைப்படுத்தியது.

தேர்வு முறையிலும் மாற்றம்
சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை மூன்றாக பிரித்து ஒவ்வொரு பாடத் திட்டத்திற்கும் அக மற்றும் புற மதிப்பீட்டின் படி மாணவரின் தேர்ச்சி கணக்கில் எடுத்துக் கொண்டது. அதனால், மாணவர்களின் புத்தக சுமை குறைந்து தேர்வு முறையிலும் மாற்றம் ஏற்பட்டது.
"கிரேடு"
அதன்படி, அக மதிப்பெண் படி மாணவரின் தனித்திறனுக்கு 40 மதிப்பெண், புற மதிப்பீடான எழுத்துத்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும் வழங்கப்படும். மொத்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து மாணவர்களை "கிரேடு" வாரியாக மதிப்பிடப்படுகிறது. மாணவரின் இடைநிற்றல், தேர்வு பயம், புத்தகச்சுமை ஆகியன தவிர்க்கப்பட்டதால் 2013-14ம் கல்வி ஆண்டில் ஒன்பதாம் வகுப்புக்கும், 2014-15ம் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கும் முப்பருவ கல்வி செயல்படுத்தப்படும் என, கல்வித்துறை அறிவித்தது.
கடந்த கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்புக்கு முப்பருவ கல்வியை செயல்படுத்திய கல்வித்துறை, வரும் கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.க்கு முப்பருவ கல்வியை அமல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டிய நிலைக்கு கல்வித்துறை தள்ளப்படும் என, கூறப்படுகிறது. அதனால், வரும் கல்வி ஆண்டுக்கு எஸ்.எஸ்.எல்.சி. மாணவருக்கு பழைய பாடத்திட்டத்தின் படியே தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்யும் பணி துவங்கி உள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: முப்பருவ கல்வித் திட்டத்தில் பாடத்திட்டத்தை மூன்றாக பிரித்து தேர்வு நடத்தப்பட்டு மதிப்பீடு செய்யப்படுகிறது. அந்த முறையை, பொதுத்தேர்வு திட்டத்தில் உள்ள, எஸ்.எஸ்.எல்.சி.,க்கு அறிமுகப்படுத்தினால், மாணவர்களை மதிப்பீடு செய்வதில் பல சிக்கல் ஏற்படும். மேலும், மூன்று தேர்வுகளையும் பொதுத்தேர்வு நடத்துவது போல் நடத்தி முடிவு வெளியிட வேண்டும். ஏற்கனவே, ஒரு பொதுத்தேர்வை நடத்தி எவ்வித பிரச்னையும் இல்லாமல் தேர்வு முடிவு வெளியிடுவதில் கல்வித்துறை பல பிரச்னைகளை சந்திக்கின்றன.
பாடப் புத்தகம்
எஸ்.எஸ்.எல்.சி.க்கு முப்பருவ திட்டத்தை தற்போதைக்கு கொண்டு வரமுடியாது என, அரசிடம் விளக்கப்பட்டுவிட்டது. அதனால், பழைய பாடத்திட்டத்தின்படி எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கு பாடப் புத்தகம் அனுப்பும் பணி துவங்கிஉள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment