Tuesday, May 13, 2014

பள்ளி வாகன பாதுகாப்பு - 23ம் தேதி வரை கெடு

பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த ஆய்வை வரும் 23ம் தேதிக்குள் முடிக்குமாறு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

கண்காணிப்பு குழு
தமிழகத்தில் உள்ள பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக உள்ளதா என்ற ஆய்வை போக்குவரத்து துறையின் கண்காணிப்பு குழுக்கள் கவனித்து வருகின்றன. ஆண்டுக்கு நான்கு முறை பள்ளி வாகனங்களை அவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து ஜூனில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த நிலையில் பள்ளி வாகன ஆய்வை மாவட்ட அளவில் துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில் மொத்தம் 18,786 பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை  போக்குவரத்து துறையை சேர்ந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கல்வி மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் இணைந்து பரிசோதித்து வருகின்றனர். சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு கடந்த 7ம் தேதி துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. நேற்று சென்னை நந்தனம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஐந்து பள்ளிகளை சேர்ந்த 30 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
ஆய்வு
அப்போது படிக்கட்டு அவசர கால கதவு டயர்கள் முதலுதவி பெட்டி தீயணைப்பு கருவி கள் வேக கட்டுபாட்டு கருவி உள்ளிட்ட 16 பாதுகாப்பு அம்சங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். இவற்றில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட 10 வாகனங் கள் திருப்பி அனுப்பப்பட்டன. அந்த வாகனங்கள் ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளன. இதே போல மற்ற மாவட்டங் களிலும் கலெக்டர் தலைமை யில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரும் 23ம் தேதிக்குள் அனைத்து பள்ளி வாகனங்களிலும் முதல் கட்ட ஆய்வு முடிந்து தகுதி சான்றிதழ் பெற்ற வாகனங்கள் மற்றும் பெறாத வாகனங்களின் விவரங்களை அளிக்க ஆர்.டி.ஓ.க்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அனுமதிக்க மாட்டோம்
முதல் கட்ட ஆய்வின் முடிவில் குறைபாடுகள் உள்ள வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முறைப்படுத்தப்பட்டு ஜூன் முதல் வாரத்தில் அடுத்த ஆய்வு நடக்கும். தகுதி சான்றிதழ் பெறாத பள்ளி வாகனங்களை இயக்க அனுமதிக்க மாட்டோம்.

No comments:

Post a Comment