Friday, May 2, 2014

மொத்தம் 1,184 பள்ளி செல்லா குழந்தைகள் கண்டுபிடிப்பு

ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில், இதுவரை நடந்த பள்ளிசெல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின்படி, மொத்தம் 1,184 குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உண்டு, உறைவிட மையங்கள் நடத்த ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆண்டுதோறும், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
தொடர்ந்து, அம்மாணர்வகளுக்கு, குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகள் வழங்கப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். கடந்த கல்வியாண்டில், 3,712 பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் திறன் அடிப்படையில், பள்ளிகளிலும், உண்டு, உறைவிட பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டனர்.
நடப்பு 2014 - 15ம் கல்வியாண்டின் கணக்கெடுப்பு பணி, அனைத்து மாவட்டங்களிலும், கடந்த ஏப். 1ம் தேதி முதல் நடந்து வருகிறது. ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் உள்ள 22 வட்டாரங்களிலுள்ள 3,369 குடியிருப்பு பகுதிகளில், இந்த கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இப்பணியில், ஆசிரியர் பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் உட்பட 300 பேர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 1,184 பள்ளிசெல்லா குழந்தைகளும், 516 புதிய மாற்றுத்தினாளி மாணவர்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 2014-15ம் கல்வியாண்டில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ், ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் செயல்பட உள்ள உண்டு, உறைவிட மையங்களைச் சிறப்புடன் நடத்திட ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களிமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் (பொறுப்பு) ஞானகவுரி கூறுகையில், "கடந்த 25ம் தேதி வரை, 1,184 பள்ளிசெல்லா குழந்தைகளும், 516 புதிய மாற்றுத்தினாளி மாணவர்களும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இக்குழந்தைகள் வரும் ஜூன் மாதம் முதல், சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்படவுள்ளனர். 2014-15ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தில் செயல்பட உள்ள உண்டு, உறைவிட மையங்களைச் சிறப்புடன் நடத்த ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள், மே 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 9ம் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் சார்ந்த ஆவணங்களையும் இணைக்க வேண்டும் என்றார்.
விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்?: விண்ணப்பங்களை, கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்/மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர், மாவட்ட திட்ட அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்கம், கோவை - 1 என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 97888 58527 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment