Wednesday, May 14, 2014

வணிகவியல் படிப்புக்கு கடும் போட்டி

சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லூரிகளில் வணிகவியல் படிப்புக்கான விண்ணப்பங்கள் அதிகளவில் மாணவர்களால் வாங்கப்படுகின்றன.

சென்னையில் அரசு கல்லூரிகளை பொறுத்தவரை "பி.காம்., கார்ப்பரேட் செகரட்டரிஷிப்" பாடம் மாநில கல்லூரி (இருபாலர்), நந்தனம் (ஆடவர்) கலை கல்லூரி, ராணி மேரி (மகளிர்) கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் மட்டுமே உள்ளது.
வாய்ப்புகள்
தற்போது சென்னையில் உள்ள தனியார் கல்லூரிகளுக்கு நிகராக அரசு கல்லூரிகளிலும் "பி.காம்., பி.காம். கார்ப்பரேட் செகரெட்டரிஷிப்" படிப்புகளுக்கான விண்ணப்பங்களை, மாணவர்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து, சென்னை மாநில கல்லூரியின் நிறுவன செயலரியல் துறைத் தலைவர், ஜான் சேவியர் கூறியது: பொதுவாகவே வணிகவியல் துறைக்கு சென்னை போன்ற பெருநகரங்களில் போட்டி இருக்கும். சிறிய நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை அனைத்திலும் வணிகம் சார்ந்திருக்கும் வேலைவாய்ப்புகள் தான் இதற்கு காரணம்.
கணக்காளர், காசாளர், விற்பனை பிரதிநிதி, வணிக மேலாளர் போன்ற பல்வேறு பணி இடங்களுக்கு, பி.காம்., போன்ற படிப்புகளை படித்த வணிக பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் எம்.பி.ஏ., ஐ.சி.டபுள்யூ.ஏ., சி.ஏ., ஏ.ஐ.எஸ்.இ. போன்ற மேல் படிப்பு படிக்கும் வாய்ப்பு இருப்பதாலும், நிறைய நிறுவனங்களில் கவுரவமான வேலை கிடைப்பதாலும் இந்த போட்டி நிலவுகிறது.
ஆங்கில அறிவு அவசியம்
மாணவர்கள், கல்லூரியில் படிக்கும் போதே இணையதள பயன்பாடு மற்றும் ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். "டேலி" மென்பொருள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வருங்கால வைப்பு நிதி (ப்ராவிடண்ட் பண்ட்), விற்பனை வரி உள்ளிட்ட துறை சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்வதன் மூலம், எளிதில் வேலைவாய்ப்பை பெறவும், கிடைத்த வேலையை தக்க வைத்து கொள்ளவும் முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment