Tuesday, May 13, 2014

ரிசல்ட் தாமதம் - கவலையில் சி.பி.எஸ்.இ. மாணவர்கள்

தமிழகத்தில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

மாநில பள்ளிகளுக்கான பிளஸ் 2 தேர்ச்சி முடிவு மே 9 ல் வெளியானது. மாணவர்களுக்கு மே 21ல் மதிப்பெண் பட்டியல் வழங்க இருந்தாலும் மதிப்பெண் விவரப் பட்டியலை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விரும்பும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளை தேர்வு செய்து, பி.ஏ., பி.பி.ஏ., பி.காம். படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
லோக்சபா தேர்தல் காரணமாக, பல மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. தேர்வுகள் தள்ளிப்போனதால் சில மாநிலங்களில் ஏப்.6 வரை தேர்வுகள் நடந்தன. இந்தாண்டு தேர்ச்சி முடிவுகள் மே 25க்கு பிறகு தள்ளிப்போக வாய்ப்புள்ளது. மாநில பள்ளி மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்கவுள்ள நிலையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு இதுவரை ரிசல்ட் வெளியிடாதது பெற்றோரிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அமெரிக்கன் கல்லூரியில், இப்பிரிவு மாணவர்களுக்காக ஆண்டுதோறும் 10 சதவீதம் இடம் ஒதுக்கப்படும். பல கல்லூரிகளில் ரிசல்ட் வெளியாவதற்கு முன்னரே அட்மிஷன் குறித்து இறுதி முடிவு எடுத்து விடுவதாக மாணவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
மதுரை கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் முத்தையா கூறியதாவது: சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பிரச்னை குறித்து தேர்ச்சி முடிவு வெளியிடுவதற்கு ஏற்ப அண்ணா பல்கலையில் மாணவர் சேர்க்கையில் காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் எங்கள் பள்ளிக்கு ரிசல்ட் வெளியாவதற்கு முன்னரே மாணவர் சேர்க்கையை 90 சதவீதம் முடிவு செய்து விடுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கலெக்டர், கல்லூரி கல்வி இணை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment