Tuesday, May 13, 2014

ஆசிரியர்கள் மீது மட்டும் நடவடிக்கையா? - குறைகள் சரியாவது எப்போது?

பிளஸ் 2 பொது தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் பாட ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி, மற்ற மாவட்டங்களுக்கும் பரவுமோ என ஆசிரியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

உத்தரவு
பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 9ம் தேதி வெளியானது. ஒட்டு மொத்த தேர்ச்சி சதவீதம் 90ஐ தாண்டியது, பள்ளி கல்வித்துறைக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனாலும் அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் திருப்தியை கொடுக்கும் வகையில் இருக்கிறதா என தற்போது ஆய்வு நடத்தி வருகிறது. மாநிலம் முழுவதும் 2,595 அரசு மேல்நிலைப்பள்ளிகளும் 1,141 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
இந்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டைவிட அதிகரித்திருக்கிறதா; குறைந்துள்ளதா; 60 சதவீதத்திற்கும் கீழே தேர்ச்சி சரிந்திருக்கிறதா; பாட வாரியான தேர்ச்சி விவரம் உள்ளிட்ட பல விவரங்களை திரட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. விவரங்களை தொகுக்கும் பணியில் முதன்மை கல்வி அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த பட்டியல் கிடைத்ததும் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர் மற்றும் இதர ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, தேர்ச்சி சதவீதம் குறைந்ததை காரணம் காட்டி கன்னியாகுமரி மாவட்டத் தில் மூன்று அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி, படந்தாலுமூடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணதாஸ் (பொறுப்பு) மற்றும் பளுகல் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சசிதரன் ஆகிய மூன்று பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
லீலாவதியின் வீடு தக்கலையில் உள்ளது. இவர் வீட்டில் இல்லாததால் தேர்வு முடிவு வெளியான நாளன்று இரவு வீட்டின் வெளிப்புற சுவரில் லீலாவதியின் சஸ்பெண்ட் உத்தரவை கல்வித்துறை அலுவலர்கள் ஒட்டி உள்ளனர்.
அதிர்ச்சியில்...
அம்மாவட்டத்தில் மேலும் 12 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் பிற மாவட்ட ஆசிரியர் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. குமரியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் நடவடிக்கை வருமோ என அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.
ஆசிரியர் மட்டும் பலிகடாவா?
கல்வித்துறை நடவடிக்கை குறித்து முதுகலை ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பல அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு மிகவும் மோசம். இப்போதும் பல பள்ளிகளில் மாணவியருக்கு கழிப்பறை வசதி கிடையாது. ஒரு மாணவி உள்ளே இருந்தால் அவருக்கு மற்றொரு மாணவி வெளியே காவல் காக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் காலி பணியிடங்களும் அதிகமாக உள்ளன.
ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலையைத் தவிர, இதர பல பணிகளும் திணிக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் பல முறை தோல்வி அடைந்து பின்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கின்றனர். தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஆசிரியர்களை மட்டும் பலிகடா ஆக்குவது எந்த வகையில் நியாயம்? இவ்வாறு அந்த நிர்வாகி பொங்கினார்.

No comments:

Post a Comment