Wednesday, May 14, 2014

மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறித்து தவறான அறிக்கை: ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 9ம் தேதி வெளியான நிலையில் மாநில அளவில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தாலும், சில மாவட்ட பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது. அதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மூன்று தலைமை ஆசிரியர்கள் "சஸ்பெண்ட்" செய்யப்பட்டனர். அதனால், தமிழகம் முழுவதும் குறைந்த தேர்ச்சி சதவீதம் காட்டிய தலைமை ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர்.
பொதுத் தேர்வில் தோல்வியடைந்த, ஒவ்வொரு மாணவரின், பாட வாரியாக எடுத்த மதிப்பெண், காலாண்டு, அரையாண்டு, திருப்புத்தேர்வில், மாணவர் எடுத்த மதிப்பெண், ஆசிரியரின் ஒப்புதல், தலைமை ஆசிரியரின் பார்வை உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும், பொதுத்தேர்வு அல்லாத தேர்வில் மாணவர் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்தால், அவரை கூடுதல் மதிப்பெண் எடுக்க வைக்க எடுத்த முயற்சிகள் என்ன என்பதை எழுத்துப் பூர்வமாக கொடுக்க அறிவுறுத்தப்பட உள்ளது. அதனால், தலைமை ஆசிரியர் மீதான நடவடிக்கை, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் மீதும் பாய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.59 சதவீதமாக இருந்தாலும், அரசு பள்ளிகளில் 92.82 சதவீதம் மட்டுமே உள்ளது. அதில், 12 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. தேர்ச்சி குறைந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியர் மட்டுமே பொறுப்பல்ல, ஆசிரியரும் பொறுப்பு என்ற விதத்தில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
அந்த பள்ளியில் பிளஸ் 2 தேர்வை 187 மாணவர்கள் எழுதினர். அதில் 154 பேர் தேர்ச்சி பெற்றனர். 33 பேர் தோல்வியடைந்தனர். மொத்தம் சதவீதம் 82.35. அதில், கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடத்தில் மட்டும் 25 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். மாணவரின் தேர்ச்சி விவர அட்டையில் கணித பாடத்தில் 100 சதவீத தேர்ச்சி என போலியான அறிக்கையை சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் கேசவன் தயாரித்து தலைமையாசிரியரிடம் சமர்ப்பித்துள்ளார். மேலும், தேர்ச்சி குறைந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர், இதுபோன்ற போலியான மதிப்பெண் சான்றை கொடுத்துள்ளதாக, தலைமை ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தலைமை ஆசிரியர் அல்லிமுத்து கூறியதாவது: எங்களது பள்ளி 98 சதவீதம் தேர்ச்சி பெறும் என்று நம்பிக்கை வைத்திருந்தோம். தேர்வு முடிவை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்துவிட்டேன். அதுவும், கணிதம் மற்றும் வணிக கணிதம் பாடங்களை எடுக்கும் ஆசிரியர் கேசவனின் மாணவர்கள் மட்டும் 25 பேர் தேர்ச்சி பெறவில்லை. ஆனால் அவர் என்னிடம் சமர்பித்த மாணவரின் கல்வித்தரம் குறித்த தேர்ச்சி விபரச் சான்றில் 100 சதவீத தேர்ச்சியை காட்டியுள்ளார்.
போலியான தேர்ச்சி சான்று என்னிடம் சமர்பித்தாரா என்பது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக, கல்வி அதிகாரிகளின் ஆலோசனைப்படி அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர், என்னை போன்ற தலைமை ஆசிரியரை ஏமாற்றினால் என்ன செய்வது என்பது தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment