Saturday, May 3, 2014

அரசு இசைப் பள்ளியில் சிறார்களுக்கான கோடைகால இசைப் பயிற்சி

ஈரோடு சம்பத் நகரில் உள்ள அரசு இசைப்பள்ளியில், சிறார்களுக்கான கோடை கால கலைப்பயிற்சி முகாம் துவங்கியது.
வரும் பத்தாம் தேதி வரை, தினமும் காலை பத்து முதல், மதியம் 12 மணி வரை நடக்கிறது. சிறார்களின் கலை ஆர்வத்தை தூண்டும் வகையிலும், இளம் வயதில் கலை ஆர்வம் மிக்கவர்களை ஊக்கப்படுத்தவும், மத்திய அரசின் ஜவகர் சிறுவர் மன்றம், தமிழகத்தில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்குகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இம்மன்றம் செயல்படுகிறது. இங்கு சிறுவர், சிறுமியருக்கு, பகுதி நேர கலை பயிற்சி வழங்கப்படுகிறது. ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், கோடை விடுமுறையில் குரலிசை, யோகா, பரதநாட்டியம், கீ போர்டு, ஓவியம், சிலம்ப கலைகளை பயின்றிடும் வகையில், கோடை கால பயிற்சி நடத்தப்படுகிறது.
நேற்று காலை பயிற்சி துவங்கியது. வரும் பத்தாம் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று, 150க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் பயிற்சி வகுப்புக்கு வந்திருந்தனர். ஐந்து முதல் 16 வயது வரை உள்ள சிறுவர், சிறுமியருக்கு மட்டும், பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்போருக்கு முகாம் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி கட்டணம் ஏதுமில்லை. உறுப்பினர் சந்தா கட்டணமாக 100 ரூபாய் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு பயிற்சிக்கும், ஒரு ஆசிரியர் கற்று கொடுக்கிறார். முதன் முறையாக, கீ போர்டு கற்று கொடுக்கப்படுகிறது. இதற்காக, ஏழு கீ போர்டுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. தவிர, வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை நான்கு முதல் ஆறு மணி வரையிலும், ஞாயிறு கிழமைகளில் காலை பத்து முதல் 12 மணி வரை ஓவியம் சிலம்பம் தவிர, ஏனையவற்றுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கிறது.
ஜூன் முதல், பிப்ரவரி வரை, வகுப்புகள் நடக்கும். இதற்கு 300 ரூபாய் கட்டணமாகும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் சத்தியமூர்த்தி கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment