Saturday, December 27, 2014

உலகின் சிறந்த 10 விஞ்ஞானிகளில் இஸ்ரோ தலைவருக்கு முதலிடம்!

2014-ம் ஆண்டிற்கான, உலகின் சிறந்த 10 விஞ்ஞானிகள் பட்டியலில் இந்திய விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடம் கிடைத்துள்ளது.
லண்டனில் இருந்து வெளிவரும் நேச்சர் எனப்படும் அறிவியல் இதழ், ஒவ்வொரு ஆண்டும் உலகின் முதல் 10 இடங்களை பெறும் விஞ்ஞானிகளை பட்டியலிட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை(இஸ்ரோ) சேர்ந்த விஞ்ஞானி ராதாகிருஷ்ணனுக்கு முதலிடத்தை அளித்துள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த ஒருவரை தேர்வு செய்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

கேரள மாநிலத்தில் பிறந்த இவர் எலக்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பெங்களூருவில் எம்.பி.ஏ., பட்டமும், காரக்பூர் ஐ.ஐ.டி.,யில் பி.எச்.டி பட்டமும் பெற்றுள்ளார். இதன் பின்னர் 1973ம் ஆண்டு இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார்.
படிப்படியாக முன்னேறிய இவர், கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி இஸ்ரோவின் தலைமை பொறுப்பை ஏற்றார். இவரது பதவிக்காலத்தில்தான் நிலவிற்கு சந்திராயன் விண்கலத்தை அனுப்பி, நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து, உலகின் பார்வையை இந்தியாவின் மீது பதிய வைத்தார் .
மேலும் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளிலேயே முதன்முறையாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கல்யான் என்ற பெயரில் விண்கலத்தை அனுப்பிய நாடு இந்தியா என்ற பெருமையை நாட்டிற்கு பெற்று தந்தார். இதன் பின்னர், பேஸ்புக்கில் இஸ்ரோவிற்கான வாசகர்கள் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்லாது, இவரது பதவிக்காலத்தில்தான் ரஷ்யாவிடமிருந்து பெறப்பட்ட ராக்கெட் செலுத்த பயன்படும் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தை சிறு சிறு மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் திறனை மேம்படுத்தியது மற்றும் சமீபத்தில் ஆளில்லா விண்கலத்தை அனுப்பி வைத்த மார்க் -3 ராக்கெட் தொழில்நுட்பம் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இளைஞர்களின் ஆர்வத்தை தூண்டிவரும் இவர், விஞ்ஞானத்தில் ஈடுபட வரும்படி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆராய்ச்சி பிரிவில் ஆண், பெண் பேதம் கிடையாது என்று கூறி வரும் இவரின் கருத்தை அங்கீகரிக்கும் இஸ்ரோவில், பெண் விஞ்ஞானிகள் 20 சதவீதம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்
நேரிடையாகவும், மறைமுகமாகவும் பல்வேறு துறைகளுக்கு இஸ்ரோ மூலம் உதவி புரிந்துள்ள இவர், வரும் 31-ம் தேதி தலைவர் பதவியில் இருந்து ஒய்வுபெற உள்ளார்.

No comments:

Post a Comment