Friday, December 5, 2014

தனியார் பள்ளிகளில் முன்கூட்டியே பொதுத்தேர்வு பாடம்?

தனியார் மெட்ரிக் பள்ளிகளில், பிளஸ் 1 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, அடுத்த கல்வியாண்டில் நடைபெறஉள்ள பொதுத்தேர்வுக்கு, இந்த மாதம் முதலே, பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பாடங்கள் எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கான புத்தகங்களை தேடி மாணவர்களின் பெற்றோர் அலைந்து கொண்டு இருக்கின்றனர்.

போட்டி நிறைந்த இந்த உலகில், யார் முன்செல்வது என்ற போட்டி அனைத்து வகையான நிறுவனங்களிடமும் உள்ளது. அந்த வகையில், கல்வி சார்ந்த நிறுவனங்களிடையே போட்டி இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால், மாணவர்களை தங்கள் இசைவுக்கேற்ப வளைத்து, பெற்றோரின் மன அழுத்தம் அதிகரிக்க, இந்த கல்வி நிறுவனங்களின் போட்டியும் செயல்பாடும் முக்கிய காரணியாக அமைகிறது.
கல்வி நிறுவனங்களின் போட்டியால், எதிர்வரும் கல்வி ஆண்டில் நடைபெறும் பொதுத்தேர்வுக்கான பாடங்களை, நடப்பு கல்வி ஆண்டிலேயே எடுக்க வைத்து, தங்களை முன்னிறுத்துகின்றன. தனியார் பள்ளிகளின் இத்தகைய செயல்பாடுகளால், மாணவர்களுக்கு கூடுதல் சுமையும், அவர்களின் பெற்றோருக்கு அலைச்சல் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
பெற்றோர் அலைச்சல்
நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வு கூட இன்னும் நடைபெறவில்லை. இந்த நிலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கு, பிளஸ் 2 பாடங்களையும்; ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பாடங்களையும் நடத்த, சில தனியார் பள்ளிகள் துவக்கிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஒரே கல்வி ஆண்டில் இரு வகுப்புகளின் பாடங்களை படித்து, மாணவர்கள் ஒரு பக்கம் சிரமப்படுகின்றனர் என்றால், அதற்கான புத்தகங்களை வாங்க, அவற்றைத் தேடி பெற்றோர் கடும் அலைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
தங்கள் பக்கத்து வீடு, தெரிந்தவர்கள், கல்வியாளர்களிடம் அடுத்த கல்வி ஆண்டுக்கான புத்தகத்தைத் தேடி பெற்றோர் அலைந்து கொண்டிருக்கின்றனர்.பெரும்பாலானோர், தற்போது பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இருந்து புத்தகங்களை வாங்கி, நகல் எடுத்து அதை ’பைன்டிங்’ செய்து தங்கள் பிள்ளைகளிடம் கொடுக்கின்றனர்.
எதை படிப்பது?
நூறு சதவீத தேர்ச்சி அடைந்த பள்ளியாக காட்ட, மாணவர்களை தனியார் நிர்வாகங்கள் சித்ரவதை செய்கின்றன. இதனால், பிளஸ் 1 பாடம் படிப்பதா அல்லது பிளஸ் 2 பாடம் படிப்பதா என, மாணவர்கள் குழம்பி தவித்து, நெருக்குதலுக்கு உள்ளாகின்றனர். அதிலும் ஒரு சில தனியார் பள்ளிகள், பெயரளவில் ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆண்டுத்தேர்வுகளை நடத்துகின்றன என, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் கல்வி மாவட்டத்தில், 32 மெட்ரிக் பள்ளிகளும், 23 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதேபோல், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில், 103 மெட்ரிக் பள்ளிகளும், 140 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பள்ளிகளில், 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள, பொதுத்தேர்வுக்கு, இப்பொழுதே, பாடம் நடத்த துவங்கிவிட்டதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற கல்வி நிறுவனங்களை, மெட்ரிக் ஆய்வாளர்கள், கண்டும் காணாமல் இருப்பதாலேயே, மிகுந்த தைரியத்துடன் அடுத்த கல்வியாண்டிற்கான வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
கண் துடைப்பா?
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, மெட்ரிக் இயக்குனரகம் அனுப்பிய சுற்றறிக்கை, வெறும்
கண்துடைப்பாகவே கருதப்படுகிறது.
இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி அலுவலக அலுவலர் ஒருவர் கூறியதாவது:
எந்த பள்ளியில் அவ்வாறு அடுத்த கல்வியாண்டிற்கான பாடம் நடத்தப்படுகிறதோ, அந்த பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே, இயக்குனரகத்தில் இருந்து வந்த சுற்றறிக்கையை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவிட்டோம். இருந்தாலும், தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment