Thursday, December 25, 2014

கேலி, கிண்டலுக்கு ஆளாகும் பள்ளி மாணவிகளுக்கு நிம்மதி

கேலி செய்பவர்கள் குறித்து அறிய சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் போலீசார் தனித்தனியாக கவுன்சிலிங் நடத்தினர்.
மாணவிகளை கிண்டல் செய்பவர்களை கண்டறிய பள்ளி வாளகத்தில் புகார் பெட்டி வைப்பதற்கும், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தினமலர் செய்தி எதிரொலியாக மாணவிகள் நிம்மதியாக பள்ளிக்கு சென்றுவரும் சூழல் ஏற்பட்டுள்ளது. பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கதிரப்பன்பட்டி, டி.வாடிப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, தர்மலிங்கபுரம், நாகம்பட்டி, நல்லகருப்பன்பட்டி, ஜெயமங்கலம் கிராமங்களைச் சேர்ந்த 600 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சில பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சிலர் மாணவிகளை பள்ளி செல்லும்போதும், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது கேலி, கிண்டல் என தொந்தரவு செய்தும், மிரட்டியும் வந்தனர். ஆனால் பெற்றோர்கள் புகார் செய்ய தயக்கம் காட்டி வந்தனர். இதனால் ரோமியோக்கள் எவ்விதமான அச்சமும் இல்லாமல், தைரியமாக மாணவிகளை பாடாய்படுத்தி வந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. மாவட்ட எஸ்.பி., மகேஸ் உத்தரவுப்படி தேவதானப்பட்டி போலீசார் குள்ளப்புரம், ஜி.கல்லுப்பட்டி, தேவதானப்பட்டி அரசு பள்ளிகளில் காலை, மாலை நேரங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சில்வார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு எஸ்.ஐ., மணிவண்ணன், போலீசார் போத்திராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கவுன்சிலில் நடத்தினர்.
அப்போது யாராவது மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ அல்லது பள்ளி வந்துசெல்லும் வழித்தடங்களில் யாராவது இடைமறித்து தொந்தரவு செய்தால் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் தகவல் தர வேண்டும். மேலும் பள்ளியில் தனியாக புகார்பெட்டி வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொந்தரவு செய்யும் நபர்கள் குறித்து புகார் எழுதி போடலாம். புகார் செய்யும் மாணவிகளின் பெயர் ரகசியமாக வைக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். இதனால் மாணவிகள் நிம்மதியடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவிகளை பின்தொடரும் மாணவர்கள், இளைஞர்களை கண்காணிக்கவும் போலீசார் குழு அமைத்துள்ளனர்.

No comments:

Post a Comment