Saturday, December 27, 2014

என்.எம்.எம்.எஸ். தேர்வு குறித்த விழிப்புணர்வு இல்லை - மாணவர் பங்கேற்பில்லாத அவலநிலை

கோவை மாநகராட்சி கல்வி அதிகாரிகளுக்கும், உயர்நிலை மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும், என்.எம்.எம்.எஸ்., தேர்வு குறித்த விழிப்புணர்வு இன்மையால், 23 மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் ஒருவரும் பங்கேற்க இயலாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய வருவாய் வழி திறன் உதவித்தொகை திட்டத்தில், (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வு ஜன., 3ம் தேதி நடக்கவுள்ளது. இத்தேர்வுக்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.
இத்தேர்வில், பங்கேற்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் 1.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருப்பதுடன், ஏழாம் வகுப்பு முழு ஆண்டு தேர்வில் குறைந்தபட்சம், 55 சதவீத மதிப்பெண் பெற்றிருப்பது அவசியம். தேர்வில், வெற்றிபெறும் மாணவர்களுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உதவித்தொகையாக, மாதம் 500 ரூபாய் வழங்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், இத்தேர்வில் பங்கேற்க அரசு, அரசு உதவிபெறும், மாநகராட்சி மற்றும் தனியார் உட்பட, 398 பள்ளிகளிலிருந்து, 5529 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பெரும்பாலான தனியார் பள்ளி மாணவர்கள், இத்தேர்வுக்கு சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோன்ற பயிற்சிகள் கிடைப்பதில்லை. பொதுவாக, அரசு பள்ளிகளில் இத்தேர்வு குறித்த விழிப்புணர்வு குறைவால், மாணவர்கள் பங்கேற்பதில்லை.
நடப்பு கல்வியாண்டில், கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 102 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், 18 பள்ளிகள் தவிர மீதமுள்ள, 84 பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். இருப்பினும், விண்ணப்பிக்காத 18 பள்ளிகள் மீதும் கவனம் செலுத்த வேண்டியதும் அவசியம்.
இந்நிலையில், மாநகராட்சி பள்ளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், 28 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வெறும் நான்கு பள்ளிகளில் மட்டுமே, சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மீதம் உள்ள 23 பள்ளிகளில், ஒருவரும் விண்ணப்பிக்கவில்லை. நான்கு பள்ளிகளுக்கு தகவல் கிடைத்திருக்கும்பொழுது, பிற பள்ளிகள் இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.
தனியார் பள்ளி மாணவர்களை காட்டிலும், இதுபோன்ற கல்வி உதவித்தொகை, அரசு மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கே தேவைப்படுகிறது. இருப்பினும், ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளின் விழிப்புணர்வு குறைவால், மாணவர்களே கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி, என்.எம்.எம்.எஸ்., தேர்வில் அனைத்து பள்ளிகளிலிருந்தும், அதிகப்படியான மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, அறிவுறுத்தியும் மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் செயல்படுவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாநகராட்சி கல்வி அலுவலர் (பொறுப்பு) வசந்தா கூறுகையில், "இத்தேர்வு குறித்து அரசிடம் இருந்து எத்தகவலும் பெறப்படவில்லை. பள்ளிகளில் விசாரித்து பதில் அளிக்கின்றேன்" என்றார்.

No comments:

Post a Comment