Tuesday, December 16, 2014

கிறிஸ்துமஸ் தினத்தில் மத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறையே: அமைச்சர் ஸ்மிருதி இரானி

கிறிஸ்துமஸ் திருநாளில் பள்ளிகள் செயல்படும் என, செய்தித்தாளில் வெளியான செய்தி தவறானது. அன்று வழக்கம் போல் பள்ளிகளுக்கு விடுமுறையே என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும், டிச., 25ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதே நாளில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் இந்து மகாசபையின் தலைவர் மதன்மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்த நாளும் வருவதால், மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு, டிச., 25ஐ, நல்லாட்சி நாள் என்ற பெயரில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து, மத்திய அரசின் கீழ் இயங்கும், சி.பி.எஸ்.இ., கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில், மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று வெளிவந்த பிரபல நாளிதழில், கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மத்திய அரசு பள்ளிகள் செயல்படும் என, செய்தி வெளியானது. இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கட்சித் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
நேற்று, டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, செய்தித்தாளில் வெளியான செய்தி குறித்து விளக்கம் அளித்தார். ஊடகங்கள் இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தக்கூடாது என கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: டிச., 25ஐ, நல்லாட்சி நாளாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில் விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்; அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் கிடையாது.
ஆன் -லைனிலும் இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்கலாம். மேலும், எந்த சுற்றறிக்கையிலும், கிறிஸ்துமஸ் அன்று பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கவில்லை. கிறிஸ்துமஸ் திருநாளன்று, பள்ளிகளுக்கு வழக்கம்போல் விடுமுறையே. இதுகுறித்த விளக்கமான சுற்றறிக்கையை அமைச்சகம் விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment