Friday, December 12, 2014

விடுமுறை எடுத்த மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்டிசம்பர்

பள்ளிக்கு வராமல் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துள்ள, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுக்கும் ஒழுங்கீன மாணவர்களால், கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். மாநில அளவில், ரேங்க் எடுக்கும் அளவுக்கு கல்வித்தரம் இருந்தும், விடுமுறை எடுக்கும் மாணவர்களால் தேர்ச்சி விகிதம் சரிகின்றது. இதன் காரணமாக, விடுமுறை எடுக்கும் மாணவர்கள் குறித்து, ஆய்வுகள் நடந்து வருகின்றது.
ஒவ்வொரு ஆண்டும், பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் நோக்கில், பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளும் போது, மாணவர்களின் வருகை பதிவையும் ஆய்வு செய்யவேண்டும் என்றும், தொடர்ந்து, 10 நாட்கள் பள்ளிக்கு வராமல், விடுமுறை எடுத்துள்ள மாணவர்களை இருப்பதை அறியும் பட்சத்தில், அதற்கான காரணங்களை கேட்டறிந்து, பெற்றோரை அழைத்து பேசி மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இன்மை மற்றும் ஆசிரியர்களின் மீது பயமின்மை போன்ற காரணங்களால், அரசு பள்ளிகளில் மாணவர்கள் விடுமுறை எடுப்பது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக, சில மாணவர்கள் மாதத்திற்கு இரண்டு தினங்கள் பள்ளிக்கு வருவதும், மீதம் உள்ள நாட்கள் விடுமுறை எடுப்பதால், பள்ளியிலிருந்து நீக்கவும் வழியில்லாமல், தேர்வுக்கு அனுமதிக்கவும் முடியாமல், ஆசிரியர்கள் திணறி வருகின்றனர்.
இதுபோன்ற சில மாணவர்கள் அரசிடம் இருந்து கிடைக்கும், லேப்டாப், உதவித்தொகை போன்ற பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு மட்டும் பள்ளிக்கு அவ்வப்போது வந்து செல்வதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ”பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம், 75 சதவீதம் வருகை பதிவு வைத்திருப்பது அவசியம். ஆனால், சில மாணவர்கள் 50 சதவீதம், 30 சதவீதம் என்று அளவில் வருகையை பதிவு செய்துள்ளனர். இம்மாணவர்களை தேர்வுக்கு அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
”பள்ளிக்கு வராமல் மாணவர்கள் எங்கு செல்கின்றனர் என்பது பெற்றோர்களுக்கும் தெரியவில்லை, இதுபோன்ற மாணவர்களை கண்காணிக்காமல் விடும் பெற்றோர்களால், மாணவர்களின் எதிர்காலம் சீரழியும் சூழல் ஏற்படுகின்றது. தலைமை அதிகாரிகளுக்கு வருகை பதிவு மிகவும் குறைவாக உள்ள மாணவர்களை பற்றி தெரிவித்து பின்பு, நடவடிக்கை எடுக்கப்படும், ” என்றார்.

No comments:

Post a Comment