Thursday, December 11, 2014

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதியில் நிறுத்தும் தனியார் பள்ளிகள்

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க மறுப்பதுடன், பாதியில் நிறுத்தும் அவலமும் நீடிக்கிறது. இதனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அவர்களின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்துள்ளது.

விரட்டுவது ஏன்?
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க பல பெற்றோர் விரும்புகின்றனர். அவர்களுக்கு, மாநகராட்சி பள்ளிகளில் பல்வேறு சலுகைகளுடன், சிறப்பு கவனம் செலுத்தி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உரிய முக்கியத்துவம் இருக்காது என்று கருதும் பெற்றோர், அதிக நன்கொடை கொடுத்தும் எப்பாடுபட்டாவதும், தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர்.
பணத்திற்காகவும், நெருக்கடியாலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை, பள்ளியில் சேர்த்துக் கொள்ளும் தனியார் பள்ளிகள் ஒரு கட்டத்தில் அவர்களை பள்ளியில் இருந்து நிறுத்திவிடுகின்றன. சில பள்ளிகள், கல்வியாண்டு முடிவதற்குள் கட்டாயப்படுத்தி குழந்தைகளை பள்ளியில் இருந்து விரட்டுகின்றன.
தற்போது ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவனை, தனியார் பள்ளியில் பாதியில் நிறுத்த, அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில் அந்த மாணவனை மாநகராட்சி தனது பள்ளியில் சேர்த்துள்ளது.
முன்வருவரா?
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பள்ளியில், தற்போது 700க்கும் அதிகமான மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் படிக்கின்றனர். அடையாறு மண் டலத்தில் அதிகபட்சமாக 70 மாணவர்கள், 56 மாணவியர் படிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக கூறி, பெற்றோர் மாநகராட்சி பள்ளிகளை அணுகி வருகின்றனர். இதனால் ஆரம்பத்தில் குறைவாக இருந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அதிகரித்து வருகிறது.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மீது மாநகராட்சி கல்வித்துறை சிறப்பு கவனம் செலுத்துகிறது. பெற்றோர் இதுபோன்ற குழந்தைகளை மாநகராட்சி பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

No comments:

Post a Comment