Wednesday, December 10, 2014

மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு போட்டிகளில் மனதைப் புண்படுத்தும் பரிசுத்தொகை

மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை, வீரர், வீராங்கனைகளின் மனதை காயப்படுத்தும் வகையில் உள்ளது.
பரிசுத்தொகையை அதிகரித்து வழங்காவிடில் போட்டிகளை புறக்கணிப்போம் என்று, மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவில், மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள், கோவையில் வரும் 12ம் தேதி பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா வித்யாலயா விளையாட்டரங்கில் நடக்கவுள்ளன. வெவ்வேறு பிரிவுகளில், பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வயது வரம்பு நிர்ணயம் இல்லாததால், பள்ளி மாணவர்கள் முதல் அனைவரும் பங்கேற்கவுள்ளனர். சக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு மாவட்ட அளவில் நடக்கும் போட்டிகளுக்கு ஆயிரம் ரூபாய் முதல், மாநில அளவிலான போட்டிகளுக்கு ஒரு லட்சம் வரை, பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் முதல் பரிசு, 70 ரூபாயும், இரண்டாம் பரிசு, 50 ரூபாயும், மூன்றாம் பரிசு, 30 ரூபாயும் வழங்கப்படுவது, ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்க வரும் மாற்றுத்திறன் கொண்ட வீரர், வீராங்கனைகளை காயப்படுத்துவதாக உள்ளது. அரசு அளிக்கும் பரிசுத்தொகை, போக்குவரத்து செலவிற்கு கூட பயன்படுத்த முடியாத அளவிற்கு, பற்றாக்குறையாக உள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க மாவட்ட தலைவர் சூரியநாகப்பன் கூறுகையில், "மாநிலம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் போட்டிகளில் இதே அவலநிலைதான் உள்ளது. பரிசுத்தொகையை பார்க்கும்போதே, போட்டிகள் பெயரளவில் தான் நடத்தப்படுகிறது என்பதை புரிந்துகொள்ள முடிகின்றது. முதல் பரிசு 70 ரூபாயும், இரண்டாம் பரிசு 50 ரூபாயும், மூன்றாம் பரிசு 30 ரூபாயும் வழங்கப்படுகிறது.
இப்பரிசுத்தொகை மாற்றுத்திறனாளிகளை ஊக்கப்படுத்தவா இல்லை ஊனப்படுத்தவா என்று தெரியவில்லை. பலமுறை வலியுறுத்தியும் பயனில்லை. வரும் 12ம் தேதி நடக்கவுள்ள போட்டிகளில், பரிசுத்தொகையை அதிகரித்து வழங்கவில்லை எனில், போராட்டம் நடத்துவதுடன், இப்போட்டிகளையும் புறக்கணிக்கவுள்ளோம்" என்றார்.
காயப்படுத்தும் போட்டி அமைப்பாளர்கள்
மாற்றுத்திறனாளி வீராங்கனை பார்வதி கூறுகையில், "என்னை போன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு போட்டி மிகவும் குறைவு. இதுபோன்று நடத்தப்படும் ஓரிரு போட்டிகளுக்காக, ஆண்டு முழுவதும் காத்துக்கிடக்கிறோம். ஆனால், பரிசுத்தொகை என்ற பெயரில் எங்களை காயப்படுத்துகின்றனர். தற்போது நடக்கவுள்ள போட்டிகள் பெரியநாயக்கன்பாளையத்தில் நடக்கிறது.
நான் நீலம்பூரிலிருந்து செல்ல வேண்டும். இரு சக்கர வாகன வசதி இல்லாததால், சென்று வருவது மிகவும் சிரமம். எங்களை போன்றவர்களின் சிரமங்களை ஆராயாமல், பெயரளவில் போட்டிகளை நடத்தி எங்களை புண்படுத்துகின்றனர்" என்றார்.

No comments:

Post a Comment