Sunday, December 14, 2014

டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் குழந்தை விஞ்ஞானி விருதுக்கு தேர்வு

பெரியகுளம் டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவில் குழந்தை விஞ்ஞானி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாராட்டினார்.

மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை, தேசிய தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 22 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாடு புதுக்கோட்டை பொறியியல் கல்லூரியில் நடந்தது. மாநாட்டில், தட்பவெப்ப நிலையையும் மற்றும் காலநிலையையும் புரிந்து கொள்வோம் என்ற தலைப்பின் கீழ் மாநிலம் முழுவதிலிருந்தும் 253 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
இதில் பெரியகுளம் உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட டி.வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் குழந்தை விஞ்ஞானி விருது பெற்றனர். அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் ஞானசுந்தரி, மணிமேகலை ஆகியோரின் வழிகாட்டுதலினால் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஜீவித்குமார், வேணுகோபால், கோகுலக்கண்ணன், பூங்கொடி, தேவி ஆகியோர் கல்குவாரியாக மாறும் மலையும் மற்றும் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்பித்தனர்.
இந்த கட்டுரை தேனி மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் முதலிடத்தில் தேர்வானது. இந்த கட்டுரையை டிச.,27 முதல் 31 வரை பெங்களூருவில் நடக்கும் தேசிய மாநாட்டில் சமர்பிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment