Friday, December 12, 2014

மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பட்டாசு வீசி தாக்குதல்

கோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், அரையாண்டு தேர்வின் போது உள்ளே புகுந்த கும்பல், பட்டாசு வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடிகளை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, வி.கே.கே., மேனன் ரோட்டில், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளி உள்ளது. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, 625 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று காலை, பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு நடந்தது. மாணவர்கள் அறைகளில் அமர்ந்து, தேர்வு எழுதிக் கொண்டிருந்தனர். மதியம் 12.05 மணியளவில், பள்ளிக்குள் ’திடீரென’ வெடி சப்தம் கேட்டது.
பள்ளி வகுப்பறையிலிருந்த ஜன்னல்கள், கல் வீசி உடைக்கப்பட்டன. அதிர்ச்சியடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் வெளியே ஓடி தப்பினர். பள்ளி தலைமையாசிரியர் அறை முன்பிருந்த, தகவல் பலகை அடித்து நொறுக்கப்பட்டது; அவரது அறைக்குள் பட்டாசுகள் வீசப்பட்டன.
தகவல் அறிந்த, கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு உதவி கமிஷனர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் செல்வதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி, மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி ஆகியோரும், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 15ம் தேதி பள்ளியில் ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடந்துள்ளது. அப்போது பெற்றோர் முன்னிலையில், சரியாக படிக்காத பிளஸ் 1 மாணவர்கள் சிலரை, தலைமையாசிரியர் நிர்மலாதேவி மற்றும் சில ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதன்பின் தலைமையாசிரியர் மருத்துவ விடுப்பில் சென்றுவிட, மாணவர்கள் தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் மீது, சி.இ.ஓ.,விடம் புகார் அளித்துள்ளனர். மருத்துவ விடுப்பில் சென்ற தலைமையாசிரியர், நேற்று காலை பள்ளிக்கு திரும்பிய நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், ” தலைமையாசிரியர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து, விசாரணை குழு அமைத்து விசாரிக்கப்படுகிறது. பள்ளிக்குள் தாக்குதல் நடத்தியது மாணவர்களா அல்லது மாணவர்கள் போர்வையில், வெளியாட்கள் நுழைந்தனரா என, விசாரிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து, தீர விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதையடுத்து பள்ளியின் முன், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மூன்று மாணவிகளுக்கு மூச்சு திணறல்: மாணவர்கள் தேர்வு எழுதிய அறைக்குள் புகுந்த கும்பல், அங்கிருந்த ’தீயணைப்பு’ கருவிகளை வீசி சேதப்படுத்தினர். அதிலிருந்து வெளியான புகையால், பிளஸ் 2 மாணவிகள் மூன்று பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள், அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு, முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

No comments:

Post a Comment